பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

261

அவள் இவளையே உற்றுப் பார்க்கிறாள்.

“கண்ணம்மா? பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டார்களா? உன் மாமி ராஜமாதா இதற்குத்தான் வந்தாளா? கண்ணே உன்னை, இதற்காகவா தாயின் மடியில் இருந்து பிரித்து மண்ணில் பதித்தேன்? ஏர்முட்டும்; அரசமகளாவாள் என்று கனக்குப் போட்டேன்.

பூமகள் ஒரு கணம் உலக இயக்கமே நின்றுவிட்டாற் போல் உணருகிறாள் சிப்பி வெடித்து முத்துக்கள் சிதறுகின்றன.

‘என் வாரிசு அரச வாரிசு. ஆனால் அரண்மனை மதில்களுக்குள் அரச தர்மம் என்பது.பெண்களின் உரிமைகளைத் தறிக்கும் கொடுவாள் என்பதை உணர்ந்தும். மதிமயங்கி உன்னை அரச மாளிகையில் சேர்த்தேன். மேல் வருணதருமங்களில், மண், பொன் பெண் ஆதிக்கங்களே முதன்மையானவை. அங்கே மனித தருமத்துக்கே இடமில்லை. கண்ணே. உன் பிள்ளைகளை அனுப்பாதே!

போதும் போதும் அம்மா!’ என்று பூமகள் அலறுகிறாள். அந்தக் குரல் சத்திய முனிவரை அங்கு வரச்செய்கிறது.

“இந்தக் கானகத்தின் உயிர் இவள். இவள் வனதேவி, இவள் மைந்தர்கள் இந்த வனதேவியின் மைந்தர்கள்.அரச வாரிசுகளாகப் போக மாட்டார்கள். அவர்கள் அருந்திய பால். மனித தருமப்பால், அன்னையே அமைதி கொள்வீர்!” என்று ஆறுதல் அளிக்கிறார்.

உச்சி கடந்து பொழுது இறங்கும் நேரம், பாதையில் தலைகள், குடை தென்படுகிறது.

ஆனால், தாரை தப்பட்டை, சங்கொலி, ஆரவாரம் எதுவும் இல்லை. அவந்திகாதான் விரைந்து முன்னே வருகிறாள்.

பூமகளும் சத்திய முனியும் முற்றத்தில் நிற்கின்றனர். கேகய அன்னை அசோக மரத்தின் கீழ்ப் புற்றரையில் அமர்ந்திருக்கிறாள்.

முதலில் அவளை வணங்குகிறார்கள்.