பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

வனதேவியின் மைந்தர்கள்

“தேவி, மன்னர், இளையவர் இருவரும் வருகிறார்கள்.”

பூமகள் சரேலென்று குடிலுக்குள் செல்கிறாள்.

அவந்திகா, விருந்தினர் உபசரிப்புக்கான நீர், இருக்கைப் பாய்கள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செல்கிறாள்.

“அரசே. அமர வேண்டும். இங்கே வந்தது பெரும் பாக்கியம்.”

குந்தியும் கும்பியும் இறைச்சி பக்குவம் செய்து கொண்டுவரும் மணம் அவள் நாசிக்கு எட்டுகிறது. பிள்ளைகள் இருவரும் வந்து அவள் இருபக்கங்களிலும் நிற்கிறார்கள். வாழை இலைகள் அறுத்துச் செல்கிறான் களி. இதெல்லாம் வெறுங் கன வோட்டங்கள். நிகழப்போவது என்ன? இந்த விருந்துபசாரம், சந்திப்பு, பேச்சு வார்த்தைகள், எந்தக் கருத்தை மையமாக்கு கின்றன?

“முனிவரே, நாங்கள் முடிவு செய்த விட்டோம். பிள்ளைகள் இருவரும், இஷ்வாகு பரம்பரையின் சந்ததி என்று ஒப்புகிறோம். எங்களுடன் அழைத்துச் செல்ல அநுமதி கொடுக்க வேண்டும்:”

இந்தக் குரல் அவள் இதயத்தைக் கீறும் கூர்முள்ளாக ஒலிக்கிறது முனிவர் கூறுகிறார்

“நான் யார் அதுமதி கொடுக்க? உங்கள் பிள்ளைகளை, அவர்கள் தாயைக் கேளுங்கள் அரசே! அவர்களை அழைத்துச் சென்றீர்கள். இரவு தங்க வைத்துக் கொண்டீர்கள். கேளுங்கள்.”

பிள்ளைகள் தாயிடம் வருகிறார்கள்.

“அன்னையே, இவர் இந்த மன்னர், எங்கள் தந்தை என்றும், நாங்கள் அவருடன் செல்ல வேண்டும் என்றும் விரும்புகிறார். ஆனால், மன்னர், பொற்பிரதிமையை வைத்து எதற்காக யாகம் செய்ய முனைந்தார்? இந்தக் காட்டில் நாம் ஏன் தங்க வேண்டி வந்தது என்பதெல்லாம் புரியவில்லை. நாங்கள் எப்படித் தங்களை விட்டு அங்கு செல்வோம்.” என்று அஜயன் கேட்கிறான்.