பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

31

“இல்லை தாயே, காமரூபம். நாங்கள் காடுகளில் இருந்து பட்டுக் கூடுகள் கொண்டுவருவதில்லை. பட்டுப் பண்ணையே வைத்திருக்கிறோம். நேர்த்தியான பட்டு உற்பத்தி செய்யும் பண்ணை எங்களுடையது. அற்புதமான கலைஞர்கள் எங்கள் பண்ணையில் இருக்கிறார்கள். பொற்சரிகை காசியில் இருந்து தருவிப்போம். வேதபுரிச் சாலியர் தொழிலில் பிரசித்தம். நேர்த்தியான தறிகளை, இப்போது மிதுனபுரித் தொழிலாளர் உருவாக்கியுள்ளனர். இழைகளில் புகுந்து, செல்லும் குருவி கண்களுக்குப் பிரமிப்பூட்டும். மூலிகைகளில் இருந்து சாயம் தயாரிப்போம். தேவி, இந்த விலை மதிப்பற்ற ஆடைகள், மகாராணிக்கே காணிக்கையாகக் கொண்டு வந்துள்ளோம்...” பூமகள் அசையாமல் ஏதோ கனவுக் காட்சியில் மிதக்கும் உணர்வுடன் அமர்ந்திருக்கிறாள்.

‘இந்த இளம் பச்சை ஆடை, பெரியம்மைக்கு என் பரிசாக இருக்கும். அவள் உயரம், நரைக் கூந்தல், அந்த கம்பீரம். இதை அவள்மீது நான் சென்று போர்த்தும்போது... என்ன செய்வார்? அன்று பிஞ்சுப் பருவத்தில் அவளை அணைத்து முத்தமிட்டு மகிழ்வது போல் மகிழ்வாரோ?’ அந்த மென்மையான தொட்டுணர்வை இப்போதே அநுபவித்து விட்டாற் போன்று குதுகுதுக்கிறது இதயம்...

“கண்ணே, நீ ஓர் அரசகுமாரனை மணந்து செல்லும்போது, இந்தப் பெரியம்மையை நினைப்பாயோ? தேரில் உன் பதியுடன் நீ தலைகுனிந்து நாணம் காக்கும்போது, இந்த அம்மையை நினைவு கொள்வாயோ?” என்று அந்த அம்மையின் மார்பில் முகம் பதிக்காத குறுகுறுப்பு அவளை வதை செய்கிறது. இதற்குப் பரிகாரம் தேடவேண்டும். இந்த நேரத்தில், அவளைத் தவிர யாரே தாய் போல் இருக்க முடியும்?

எப்படியும் நந்த முனி சுவாமி, அந்த அம்மையை அழைத்து வருவார். அப்போது, இத்தனை வரிசைகளுடன் அவளை வரவேற்பேன். இந்த அரண்மனை அவருக்கு உரித்தாகும் பேரப்பிள்ளையைக் கண்டு மகிழ்வார்; என் சிறு உள்ளம் மகிழப் பாடிய பாடல்களை அவர்களுக்குப் பாடுவார்!