பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வனதேவியின் மைந்தர்கள்

அந்த ஆடையைத் தடவிப் பார்த்துக் கொண்டே கற்பனையில் ஆழ்ந்துவிட்ட மகாராணியின் சிந்தையை, அவந்திகாதான் நினைவுலகுக்கு இழுத்து வருகிறாள்.

“தேவி, இந்த மாந்துளிர் வண்ணமும் கடல் பச்சை நிறமும் உங்களுக்கு மிகவும் இசைவாக இருக்கும்...”

நிமிர்ந்து பார்க்கும் பூமகளின் பார்வையில் ஜலஜை படுகிறாள். எடுப்பான சிவப்பு, பூனைக் கண்விழிகள்; செம் பட்டைச் சுருள் முடி. இவள், மூத்த மகாராணியின் மாளிகைப் பணிப் பெண். மகாராணி இவளை மன்னருக்குக் குற்றேவல் செய்ய அனுப்பி வைப்பதாக சாமளியும், விமலையும் பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது.

“ஜலஜை? மன்னர் எங்கு இருக்கிறார்?”

இப்படி ஒரு பணிப்பெண்ணிடம் கேட்க நாணமாக இருக்கிறது. அப்போது எங்கிருந்தோ தத்தம்மா பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது.

“மகாராணி. மகாராணி மங்களம்..”

அவள் அதைக் கையில் பற்றி முத்தமிடுகிறாள்...

“இங்கே பட்டாடை கடை விரித்திருக்கிறது, தத்தம்மா. உனக்குப் பட்டும் வேண்டாம், ஆடையும் வேண்டாம். நீ இங்கே எந்தக் குறும்பும் செய்யாமல் பறந்து போய்விட்டு அப்புறமாக வா! இல்லாவிட்டால் அவந்திகா உன்னைக் கூண்டில் பிடித்துப் போட்டு விடுவாள்?”

“அவந்திகா, அவந்திகா!” என்று அவள் தோள்களில் குதித்து ஒரு கொத்தலைச் செல்லமாகப் பரிசளித்து விட்டுப் பறந்து போகிறது, தத்தம்மா

“அபூர்வமாக இருக்கிறது. இந்தக் கிளி. பார்த்தீர்களா? மகாராணியின் வளர்ப்புக்கிளியா? இதன் உடல் வண்ணம் பஞ்சவர்ணக்கிளியை விட நேர்த்தியானது. ஒரு மாதிரி இள நீலம் தெரியும் பசுமை. இந்த ஆடையின் வண்ணம் பாருங்கள்!”