பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

53


“ஆம் கண்ணே. அரக்கருக்கு நாம் தீனி போட்டால் அவர் உரிமை பெற்று விடுவார். பொறாமை, இம்சை, பேராசை, சுயநலம், இதெல்லாம் அவர் தீனிகள். இதனால் நமக்கு மகிழ்ச்சியே வராது; சிரிக்கவே மாட்டோம். தூக்கத்தில்கூட கெட்ட கனவுகள் வரும்... அதனால் அன்பு பெருக, யாருக்கும் தீங்கு நினைக்காமல், சுயநலம் பாராட்டாமல் மற்றவர் சந்தோசம் பெரியதாக எண்ணினால், அரக்கர் எழும்பவே மாட்டார். உணவு இல்லையெனில் எப்படித் தலை தூக்க முடியும்! குழந்தைகளே. தின்ன வரும் புலிகூட சத்தியத்துக்குக் கட்டுப்படும்; அன்பின் வடிவமாகும்!”

“எப்படி?...”

“ஒரு கதை சொல்லட்டுமா?”

“சொல்லுங்கள் பெரியம்மா”

‘இது கதை இல்லை. உண்மையில் நடந்ததுதான்.

ஒரு சமயம் ஒரு புலிக்குப் பசித்தது. அந்தப் பசியைப் போக்கிக் கொள்ள அதன் கண்களுக்கு ஒரு மிருகம்கூட அகப்படவில்லை. பசியரக்கன் அதன் உள்ளே எழும்பியதால் அதற்குக் கோபத்தைத்தான் தீனியாக்க முடிந்தது. ஆத்திரத்துடன் உறுமிக் கொண்டு வருகிறது. அப்போது ஆற்றுக்கரைப் புற்றடத்தில் வெள்ளை வெளேரென்று ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. புலி உடனே ஒரே எழும்பு எழும்பிப் பாய முனைந்தது. சாதாரணமாக யாருக்கும் அப்போது என்ன தோன்றும்?... அச்சம்... அச்சம் தான் தோன்றும். முன்பே சொன்னேனில்லையா? அச்சமும் ஒருவகையில் அரக்கனுக்குக் கொடி பிடிக்கும் குணம்தான். அது வந்தால் மனசு குழம்பிப் போகும். நகரக்கூடத் தெரியாது. உடனே அழிவுதான். புலியின் வாய்க்குள் போவதற்குத் தப்பி, பசு, ஒட முயற்சி செய்யவில்லை. மாறாக, நிலைத்து நேராகப் புலியைப் பார்த்து, நண்பரே, என்று கூப்பிட்டது. “கொஞ்சம் நில்லுங்கள். நான் உமக்கு உணவாவதில் ஒரு தடையும் இல்லை. நீங்கள் உங்கள் குட்டிகளை விட்டு, உணவு தேட வந்திருக்கிறீர்கள். எனக்கு உங்கள் பசி, உங்கள் தாபம்