பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வனதேவியின் மைந்தர்கள்


எல்லாம் புரிகிறது... எனவே ஒரே ஒரு விண்ணப்பம்...” என்று இறைஞ்சியது.

“என்ன அது?” என்று புலி உறுமிற்று.

“ஆற்றுக்கு அக்கரையில் என் கன்று நிற்கிறது. அங்கே எனக்கு உணவு கிடைக்காததால், அதற்கு வேண்டிய பால் என்னிடம் சுரக்கவில்லை. இந்த ஆற்றைக் கடந்து வரும் வலிமை அதன் கால்களுக்கு இல்லை. நான் இங்கே வாயிறார மேய்ந்துவிட்டு அக்கரை சென்று கன்றுக்குப் பால் கொடுக்க வேண்டும். அது தானாக உணவு கொள்ளும் வரையில் அதற்கு உணவூட்டிப் பாலிப்பது தாயாகிய என் கடமை. இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறந்து தாயாகும் பேறு பெற்றவர் அனைவரும் இதை உணருவார்கள். இந்தப் பூமியே நம் அனைவருக்கும் தாய். இந்தப் புல்லை, தாவர உயிர்களைத் தந்து எங்களைப் பாலிக்கிறார்கள். பூச்சி, புழு, பறவை, மான், முதலிய விலங்குகள் எல்லாமும் அப்படி ஒர் அன்பு வளையத்தில் இயங்குகின்றன.என் கன்றை நான் எப்படிப் பார்க்கிறேனோ, அப்படியே உங்களையும் பார்க்கிறேன். ஆதலால் நீங்கள், எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் அக்கரை சென்று, என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு உங்களிடம் வருவேன்... நீங்கள் உங்கள் பசியைப் போக்கிக் கொள்ளலாம்; குட்டிகளின் பசியையும் தீர்க்கலாம்” என்றது. பசு.

அதற்குப் புலி, “நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்பதை நான் எப்படி நம்புவேன்?..” என்று கேட்டது.

“நீங்கள் என்னைத் தொடர்ந்து வந்து பாருங்கள். நிச்சயமாக நான் வாக்குத் தவறமாட்டேன். இது சத்தியம்” என்று வாக்குக் கொடுத்தது பசு இந்த உலகை வாழ வைப்பதே சத்தியம்தான். மழையும், காற்றும், வெயிலும், ஆறும், பசுமையும் சத்தியத் தினால்தான் நிலைக்கின்றன. வானவீதியில் உதிக்கும் சூரியன் சத்தியம். சத்தியம் செத்தால் எல்லாம் அழியும் என் கன்றுக்குப் பால் ஊட்டிவிட்டு நான் திரும்பி வந்து உணவாவதால் அழிந்துவிட மாட்டேன். என் கன்று அந்த சத்தியத்தால் வளரும்.