பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

65

மகிழ்ச்சியுடன் அந்த இளமைப் பருவம் கழிந்தது. என்னுடைய குணங்களில் ஏதேனும் நலன்கள் படிந்திருக்கின்றன என்றால், அந்த பிரும்மசாரியின் பழக்கம்தான். அவர்தாம் என்னைக் காண வந்திருந்தார். வேதபுரியில் என் வளர்ப்புத் தந்தையும் இதையே சொல்லி அழைத்திருக்கிறார். மன்னரே, நான் தத்துவம் அறிந்த வித்தகனல்ல. கவி பாடும் குரவனுமல்ல. இந்தக் குழந்தையைப் பார்க்க வந்தேன்; போகிறேன். மன்னர் அவையில் வந்து நிற்க எனக்கு எந்த முகாந்தரமும் இல்லை, என்பார். இப்போதும் அதையே சொல்லிவிட்டுப் போனார், அரசே!”

மன்னர் சில விநாடிகள் வாளாவிருக்கையில் அவள் மேலும் தொடருகிறாள். “சுவாமி, எனக்கு ஒர் ஆசை உண்டு. அதை நிறைவேற்றுவீர்களா?” அவளை மார்போடு அனைத்து, கூந்தலை வருடியபடி, “பிரியே, இந்த சமயத்தில், நிச்சயமாக உன் ஆசையை நிறைவேற்றுவேன். அந்த முனிவருக்கத்தை அழைத்து, நான் பெருமைப்படுத்துவேன். வேடுவர்களாகவும், அடிமையின் மக்களாகவும் இருந்தவர்கள், ஆன்மானுபவம் பெற்று, வனத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் உபநயனம் செய்து வைக்கும் முனிவர் ஒருவர் பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. அவர்களை இங்கு அழைத்து உலக நன்மைகளுக்காகப் பெரிய வேள்வி நடத்த ஏற்பாடு செய்வோம். சரியா தேவி?”

“வேள்வி நடத்துவது, தங்கள் சித்தம். ஆனால் என் ஆசை அதுவல்ல, சுவாமி!”

“பின் என்ன ஆசை? தயங்காமல் சொல் தேவி! இந்த அயோத்தி மன்னன், உன் பிரிய நாயகன், உன் கோரிக்கையை நிறைவேற்ற உலகின் எந்த மூலையில் இருக்கும் பொருளாக இருந்தாலும் கொண்டு வருவான். சொல் தேவி!”

“உலகில் எந்த மூலைக்கும் தாங்கள் செல்ல வேண்டாம், சுவாமி! நாம் பதிநான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தோம். ஆனால் நான் உதயமான இடத்தை இன்று வரை தரிசிக்கவில்லை. வேடுவ மக்கள், மன்னருடன் பிறந்தவர்போல் தோழமை காட்டுகிறார்கள். ஆனால் நான் உதயமான இடத்தில் இருந்து ஒரு

வ. மை. - 5