பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

69

வானில் இருக்கும் நட்சத்திரத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. “நீ கீழிறங்கிவரமாட்டாயா?...” என்று கேட்டது. நட்சத்திரத்தால் எப்படி வர முடியும்? அது கீழே வந்தால் பூதலம் பற்றி எரியாதா? ஆனாலும் நட்சத்திரத்துக்கு பூமித்தாய்க்கு மகளாக அவள் மடியில் தவழ வேண்டும் என்று ஆசை இருந்தது. நட்சத்திரத்தின் கோடானு கோடி அணுத்துகளில் ஒன்று அன்பாய்க் குளிர்ந்து, பூமிக்குள் இறங்கியது. பூமித்தாய் அழகிய பெட்டிக்குள் மெத்தையாய் மாறினாள்.அந்தப் பூவை ஏந்தினாள். மூன்றேமுக்கால் நாழிகையில் ஒர் அழகிய குழந்தை பெட்டிக்குள் உயிர்த்தது. உன்தந்தை செய்த தவத்தால், நீ அவர்கரத்தில் வந்தாய்...

இந்தக் கதை அவளுக்கு அப்போது எவ்வளவு பெருமையாக இருந்தது?

இந்தப் பெருமைகளை, ‘குலம் கோத்திரம் தெரியாத’ என்று சொல்லைப் போட்டு அவரே அழித்து விட்டார்!...

அரவம் கேட்கிறது. பணிப்பெண்கள் வரிசைகளுடன் வருகிறார்கள். பூமை, பாதசரம் சிலுங்க, சுதானந்தரை எதிர்கொள்ளச் செல்கிறாள்.

அவள் கண்கள் வந்திருந்தவர்களில் மன்னரைத் தேடுகிறது. இளையவர்... ஊர்மியின் கணவர் தாம் வணக்கம் தெரிவிக்கிறார். அவள் தந்தையின் குலகுருவுக்குப் பாதங்களைக் கழுவி மலர்தூவி வணங்குகிறாள். உபசரித்து மாளிகைக்குள் அழைத்துச் செல்கிறாள்.

“குழந்தாய், மங்களம் உண்டாகட்டும்! நலமாக இருக்கிறாயா? தாயாக இருக்கும் உன்னையும், உன் தங்கையரையும் கண்டு வர, ஸீமந்த முகூர்த்தம் பற்றிச் சேதி அறிய உன் தந்தை என்னை அனுப்பி வைத்தார். முகம் வாட்டமாக இருக்கிறதே? உடலும் உள்ளமும் நலமாக இருக்கிறாயா, குழந்தாய்? மன்னருக்கு உன்னைப் பற்றியே கவலை, என்னைக் குறிப்பாக அதற்கே அனுப்பி வைத்தார்... இங்கே அன்னையரின் அரவணைப்பில் மன்னரின் அருகாமையில் நீ இந்த வம்சத்துக்கான மகனைப்-