பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

71

சுருங்கி, உடனே அது சுவடுதெரியாமல் மறைகிறது. வேதபுரியில் சுரமை, வினதை, எல்லோரும் நலமா சுவாமி? தாயார் எப்படி இருக்கிறார்கள்? நாங்கள் விளயாடும் பூந்தோட்டத்தில், ஒரு பவள மல்லிகை மரம் இருக்குமே? அது இன்னமும் நன்றாக இருக்கிறதா? அதன் மலர்கள் நள்ளிரவில் பூத்துத் தோட்டமெங்கும் வாசனை பரப்பி, சாளரத்தின் ஊடே வந்து என்னிடம் கொஞ்சும். அந்த மலர்களை நார் கொண்டு நான் கோத்து வைப்பேன். பவளச்சரட்டில் முத்துக்கோத்தாற் போல் கூம்பு கூம்பாக அந்த மலர்கள் இருக்கும். “ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய்? இதழகற்றிச் சிரிக்க மாட்டாயா?” என்று பேசுவாள். அந்த மரத்தின் பூச்சிறப்பு அது....” குலகுரு கண்களில் நீர்மல்க, அவள் உச்சியை வருடி ஆசிர்வதிக்கிறார். “குழந்தாய், அந்த மரமும் உன்னிடம் தன் அன்பைத் தெரிவிக்கிறது. உன்னை உன் மைந்தருடன் வரவேற்கக் காத்திருக்கிறது?” என்று தெரிவிக்கிறார்.

அவள் மீண்டும் பணிந்து எழுகிறாள்.

அவர்களைப் பின் தொடர்ந்து தோட்டம் வரையிலும் செல்கிறாள்.

சற்றுமுன் வரை நெல்மணிகளைக் கொத்திக் கொண்டு ஆரவாரித்த குருவிகள் இல்லை! பொழுது சாயும் நேரம். புற்றடத்தில் மெல்லடிகள் தோய நடந்து மரமேடைக்கு வருகிறாள்.

கிளி பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது

“தத்தம்மா?...” என்று கையிலேந்திக் கொஞ்சுகிறாள்.

“மன்னர்.... மன்னர்....”

“பொய் சொல்லாதே? மன்னர் எங்கே வருகிறார்? அவர்தாம் வருவதை மறந்து போனாரே? மன்னாதிமன்னர்.... அந்தப்புரத்தைக் கண்ணாலும் பார்க்க நேரமில்லை?”

அந்தப் பொல்லாத கிளி விர்ரென்று பறந்து சென்று

கொடிபடர்ந்த புதர் ஒன்றில் அமர்ந்து கொள்கிறது. கொவ்வைக்கனிகளும் இலைகளுமாய் உள்ள சுவர் போன்ற புதர்.