பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

வனதேவியின் மைந்தர்கள்

“யார் கற்றுக் கொடுப்பது? பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். இந்த மயில் கிளி, குயில் எல்லாம் நினைத்த மாத்திரத்தில் பறந்து சென்று எங்கோ மரக்கொம்பில் முகப்பில் உட்காருகின்றன. நமக்கு முடியவில்லை. ஏதோ குறைந்த பட்சம் அவற்றைச் சித்திரத்தில் வரையலாமே. என் தாயார், தாமரை, மாங்கனி, மாதுளை என்று வரைவாள்...”

“அது கிடக்கட்டும், சாமளி, உன் கால்களில் நீ இப்படி அழகு செய்து கொள்வாயா?”

அவள் இல்லையென்று தலையை அசைப்பதுடன் செயலில் கண்ணாக இருக்கிறாள்.

“நான் கேட்டேனே, ஏன் சாமளி? நீ உன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டாயா?”

அவள் தலை நிமிராமல், கையில் பற்றிய இறகுடன் “நான் அரசமகளா?... பிரபு வருக்கமா? அல்லது... அழகு செய்து கொண்டு ஆடவரைக் கவரும் வருக்கமா? இந்தக் கலையின் விலை என் வாழ்க்கை”

“அப்படி என்றால்?”

“தேவி, அவள் எதையோ பிதற்றுகிறாள். அழகு செய்தது போதும். காலையில் இருந்து கனிச்சாறு கூட உள்ளே போகவில்லை. சாமளி, உன் கடையைக் கட்டு!” என்று அவந்திகா அவளை அனுப்புகிறாள். அவள் சிணுங்கி அவற்றை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கிறாள். அப்போது, கொட்டென்று ஒரு பெரிய பறவை கழுத்தறுப்பட்டாற்போல் அங்கு வீழ்கிறது. பறவைப் பட்டாளமே சோகக் குரல் கொடுக்க பெரும் அமளி உண்டாகிறது.

“இது என்ன விபரீதம்? இங்கே யார் பறவையை அடித்து வீழ்த்தினார்கள்? மகாராணியின் முன் அது வீழ்கிறது? யார்...?”

பூமகள் துணுக்குற்று அதைத் தாங்குகிறாள். சாம்பலும் நீலமும் கலந்த கழுத்தில் புள்ளிகள். சிவந்த சிறு மூக்கு, கால்கள்..