பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

வனதேவியின் மைந்தர்கள்

அவந்திகா, மகாராணியைக் கூட்டிச் சென்று பரிமாறு: காட்டுக்கறிவேப்பிலை என்ன மணம்? புளியும் மிளகும் கூட்டி, அரைத்து, மாவில் செய்த ரொட்டியில் தடவி, அற்புதமான பக்குவம் செய்திருக்கிறாள்..”

பெரிய வேம்பு கிளை பரப்பும் இடத்தில், பாய் விரித்து அவளுக்கு அமுது படைக்கிறார்கள். கேகய குமாரி மாதாவும் அவளுடன் சாத்துவீக உணவு கொள்கிறாள். உணவு கொண்ட அசதியில், அவள் அதே இடத்தில் இளைப்பாறுகிறாள். இலைகள் எடுத்துத் துப்புரவு செய்த பின் அதே இடத்தில், அவள் ஒரு பஞ்சணையை வைத்துச் சாய்ந்தவாறு, அப்படியே உறங்கிப் போகிறாள்.

அந்தக் கானகச் சூழலில் அமைதித்திரை சுருள் அவிழ்ந்து வீழ்கிறது. ஏதேதோ ஒலியோவியங்கள் அவள் செவிகளில் திட்டப்படுகின்றன. குக் குக் குக் என்ற ஒர் ஒலி கிர்... கிர்... ரென்று யாழ்நரம்பை இழுத்து மீட்டும் ஒலி... ஆனால் இது நந்த சுவாமியின் ஒற்றை நாண் ஒலி இல்லை என்று உள்ளுணர்வு பதிக்கிறது. பூமகள் தன் இடையில் உள்ள பட்டாடையை விரித்துக் கொண்டு அதில் முத்துக்களைக் குவிக்கிறாள்! பரப்புகிறாள். விரல்களால் அளைந்து சிறுமிபோல் விளையாடுகிறாள். அப்போது நீல கண்டப் புறா ஒன்று வந்து அங்கே இறங்குகிறது. அது ஒவ்வொரு முத்தாகக் கொத்தி, அடுக்கி வைக்கிறது. கோபுரம் போல் அடுக்கி வைக்கிறது. அடி பரவலாக உச்சி கூம்பாக வருகையில் ஏழு முத்துக்கள் பிறகு மூன்று. உச்சியில் ஒன்று...

பூமைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைக் கையில் எடுத்து தடவிக் கொடுக்கிறாள்... “உனக்குப் பாலும் பழமும் கொடுக்கிறேன்... வா!” என்று அதைக் கையிலேந்தி மாளிகைக்குள் வருகிறாள்.

“அவந்திகா! பொற்கிண்ணத்தில் பாலும் பழமும் கொண்டா!” அவந்திகா பதறினாற் போல், “தேவி! இது தத்தம்மா இல்லை. இதைப் பழமும் பாலும் கொடுத்து வளர்க்க முடியாது. இது சிறு பூச்சி, விலங்குகள் தின்னும் கூடித்திரியப் பறவை!...”