பக்கம்:வனதேவியின் மைந்தர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

வனதேவியின் மைந்தர்கள்

இப்போது அருகில் அவந்திகாவை அமர்த்தியிருக்கிறாள் கேகயத்துச் சீமாட்டி பூமை செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.

“இளவரசர் வேட்டைக்கு வந்தாரா, எங்களுக்குத் துணையாக வந்தாரா அவந்திகா?”

“இரண்டுந்தான். இந்தக் கொடிய வேங்கைப்புலி அரசரின் ஒர் அம்பில் சாய்ந்து விட்டது. பெண்புலியாம். நான்கு முழம் இருக்கிறதாம்?”

“ஐயோ, பாவம், அது இவர்களுக்கு என்ன தீங்கு செய்தது? அதன் மாமிசமும் தின்பார்களா?”

“மகாராணி, நீங்கள் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள். மகரிஷிகளுக்குப் புலித்தோலாடை - ஆசனங்கள் எப்படிக் கிடைக்கும்? மேலும், இந்தப் புலிகளைப் பெருகவிட்டால் ஊருக்குள் நுழைந்து மனித வேட்டையாடாதா?”

அவள் பேசவில்லை.

அரண்மனைக்குள் துழைகையில் மங்கல வாழ்த்துகளின் பேரொலி செவிகளை நிறைக்கிறது.

வாயிலில் இவர்களை வரவேற்க மாமன்னர் தலைகாட்டவில்லை. அவர் அன்னை மட்டும் முகம் காட்டி “நலமாக வந்தீர்களா? ஒய்வு எடுத்துக்கொள் மகளே!” என்று வாழ்த்தி விட்டுத் திரும்புகிறாள்.

இவள் மாளிகையில் பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து, கண்ணேறு படாமல் கழிக்கிறார்கள்.

ஊர்மி, சுதா எல்லோரும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டார்கள். முற்பகல் தாண்டும் நேரம், வெயில் தீவிரமாக அடிக்கிறது.

தன் மாளிகைத் தோட்டத்துப் பசுமைகள் வாடினாற் போன்று காட்சி அளிக்கின்றன. இரண்டு நாட்கள் மட்டுமே சென்றிருக்கின்றன. ஏதோ நெடுங்காலம் வெளியே சென்று விட்டுத் திரும்புவது போல் இருக்கிறது.