90
வனதேவியின் மைந்தர்கள்
“ஏனடி பெண்களா? இதெல்லாம் என்ன நாடகம்? அழுக்கும் சளியுமாக இவளை இங்கே அனுப்பி...?” என்று அவந்திகா அதட்டுகிறாள்.
ராதை அந்த அதட்டலைப் பொருட்படுத்தவில்லை.
“ஏண்டி, சனியனே? சொல்லித் தொலையேன்? நீ செய்த செயலுக்கு நானே உன்னை வெட்டி அடுப்பில் போடுவேன்!”
“அம்மம்மா! உங்கள் வாயில் இம்மாதிரி வார்த்தைகளைக் கேட்கவோ நான் வந்தேன்? குழந்தையை ஏன் வருட்டுகிறீர்? என்ன நடந்துவிட்டது?”
“மகாராணி! நாங்கள் எதைச் சொல்ல? கிளிக் கூட்டைத் திறந்து விட்டு அதைப் பூனைக்கு விருந்தாக்கிவிட்டாள்!”
“எந்தக் கிளிக்கூடு? தத்தம்மா எப்போதும் கூட்டில் இருக்காதே? அதுவும்... மாளிகையில் அவள் இல்லாத நேரத்தில், கூட்டில் வந்து அமர்ந்ததா?”
“ஆம் தேவி. நேற்று முன்னிரவில் வந்தது. தேவி இல்லையே என்று அதற்குப் பாலும் பழமும் வைத்துக் கூட்டில் அடைத்தேன். இந்தச்சனியன் காலையில் அதைத் திறந்து விட்டிருக்கிறாள்! எங்கிருந்தோ ஒரு நாமதாரிப் பூனை குதித்துக் கவ்விக் கொண்டு போய் விட்டது!”
மனதில் இடிவிழுந்தாற்போல் பூமை குலுங்கிப் போகிறாள்.
“என் தத்தம்மாவா?”
“அதுதான்...”
“இருக்காது. அது வேறு கிளியாக இருக்கும்...”
மனசுக்குள் அவளே ஆறுதல் செய்து கொள்கிறாள்.
ஆனால் குழந்தை அழுதுகொண்டே “அது மூக்கால் தட்டி, திறந்துவிடு திறந்து விடுன்னு கொஞ்சிச்சி...” என்று தன் செய்கையின் நியாயத்தை விளக்குகிறாள்.