பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



6. அகத்தியர் யார்? எங்கே?


மயமும் குமரியும் நெடுநாட்களுக்கு முன்பே இணைந்து வாழ்ந்தன என்பது வரலாறு உணர்த்தும் உண்மை. அந்த உண்மையின் அடிப்படையில் பிற்காலத்தில் வரலாற்றுக்கு மாறுபட்ட எத்தனையோ புனைந்துரைகளும், கதைகளும், பிறவும் உண்டாயின. ஒரு சில வரலாற்று எல்லையில் அமைந்து எண்ணக் கூடியனவாய் இருப்பினும், பல வெறுங்கற்பனைக் கதைகளாகவே அமைந்துவிடுகின்றன. அகத்தியரைப் பற்றி இன்று நாட்டில் பலகதைகள் வழங்குகின்றன. அவற்றுள் பெரும்பாலன கற்பனைகளாகவே உள்ளன என்பர் ஆராய்ச்சியாளர்.[1] தமிழ் நாட்டில் எத்தனையோ அகத்தியர் பேசப்பெறுகின்றனர். அகத்தியர் மருத்துவநூலும், அகத்தியர் பாட்டிசை நூலும், அகத்தியர் இலக்கணமும், அகத்தியர் பாராயண நூலும், பிறவும் நாட்டில் உலவுகின்றன. இந்த அகத்தியரெல்லாரும் எவ்வெக்காலத்தவர் என்றும், இவர்கள் எந்த வகையில் தமிழ் நாட்டுக்கு உரியவர்கள் என்பதும் எண்ண இயலாதன.

கந்தபுராண வரலாற்றின்படி அகத்தியர் இமயத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்தவர் என்பர். வடமொழியில் உள்ள கந்தபுராணத்தில் அவரைப்பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. அவரைத் தமிழ் அறிந்த முனிவராகக் கந்தபுராணம் எங்கும் குறிக்கவில்லை. அவர் இறைவனை


  1. Agasthia in Tamil Land, by K. N. Sivaraja Pillai