உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

வரலாற்றுக்கு முன்


ஒத்தவர் எனினும், தமிழில் மொழிபெயர்த்த கச்சியப்பர் அந்த அகத்தியரைத் தமிழ் அகத்தியர் என்றே குறிக்கின்றார். ‘மலயத்து வள்ளல்’[1] என்றும், தமிழ் மாமுனி[2] என்றும் கந்தபுராணம் காட்டுகின்றது. எனவே, அப்படி அகத்தியர் சிவபெருமான் மணம் காணச் சென்றிருந்தாலும், அவர் தமிழ் நாட்டிலிருந்து சென்றார் எனக் கொள்ளல் வேண்டும். ஆனால், சில புராண வரலாறுகள் வடமொழி, தமிழ் இரண்டையும் சிவபெருமான் உலகுக்கு அருளினார் என்றும் வடமொழியைப் பாணினிக்கும், தமிழை அகத்தியருக்கும் அறிவுறுத்தினார் என்றும் காட்டுகின்றன. மொழியியல்பு அறிந்தாருக்கும், வரலாற்று அறிஞர்களுக்கும் இக்கருத்து முழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அன்று என்பது நன்கு விளங்கும். புராணங்கள் பிந்திய காலத்தில் சமயமும் பற்றும் பின்னிப்பிணைந்த காலத்துப் புலவன் உள்ளத்தில் உதித்த கற்பனைகளே என்பதை இன்று சமயநெறி உணர்ந்த தக்கவர்களே ஏற்றுக்கொள்ளுகின்றார்கள்.

மற்றும் கந்தபுராணத்தில் காட்டப்படும் அகத்தியர், அப்புராணத்தை ஒட்டிக் காளிதாசர் எழுதிய குமார சம்பவத்தில் காட்டப்பெறவில்லை. சிவபெருமான் திருமணத்துக்கு எத்தனையோ கடவுளரும் முனிவரும் வந்தனர் எனக் காட்டும் ஆரியர் அகத்தியர் வந்ததாகக் குறிக்கவில்லை என்பதை வடமொழி வாயிலாகக் கற்ற அறிஞர்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றார்கள். எனவே, அந்தப் புராண வரலாறே அகத்தியரைப்பற்றி மாறுபட்ட கருத்துக்களைத் தருகின்றது.

இனி அந்த வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொள்வோமானாலும், அவரை வரும் வழியில் விந்தியம் தடுத்த தென்றும் அவருக்கு வழி விடாது அது உயர்ந்தது என்றும் கூறுவதை நோக்கினால், மற்றோர் உண்மை புலப்படும்.


  1. கந்தபுராணம், திருமணப்படலம், 50.
  2. ஷை (மேலது). 54.