உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அகத்தியர் யார்? எங்கே?

103


அகத்தியர் அப்படி வந்ததாகவே வைத்துக் கொண்டாலும், அது இராமாயணகாலத்துக்கு முற்பட்டதாகவே இருக்க முடியும். அக்காலத்தில் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குத் தம் கலாசாரக் கொள்கையைப் பரப்பப் பலர் வந்திருக்கலாம். அவர்களில் அகத்தியரும் ஒருவராய் இருந்திருக்கலாம் என்று கொள்ளுவதே பொருத்தமானதாகும். அப்படி வந்த அகத்தியருக்கு விந்தியம் வழி விடவில்லை என்று புராணக்காரர் கூறிய கதையால் அவரைத் தென்னாட்டுக் கலாசாரமும் பண்பாடும் விந்திய எல்லையிலேயே தடுத்து நிறுத்தின என்று கொள்வது பொருந்தும். விந்தியமலைச் சாரலை அடுத்த தண்டகவனத்தில் (தண்டகாரணியம்) அகத்திய முனிவர் தங்கியிருந்தார் என்றும், இராமன் சீதை யுடனும் இலக்குவனுடனும் தெற்கு நோக்கி வரும்போது அங்கே அந்த அகத்தியர் ஆசிரமத்தில் தங்கியிருந்தான் என்றும் ஆரணிய காண்டம் நன்கு காட்டுகின்றது. எனவே, வடநாட்டிலிருந்து வந்த அகத்தியர் அங்கே தங்கித் தம் காலத்தைக் கழித்தவராக வேண்டும். அவர் இராமனைக் கண்டு, அவனோடு கலந்து மகிழ்ந்ததோடு, அந்த இராம இலக்குமணர்களை அங்கே தம்முடன் தங்கியிருக்க வேண்டினார். எனினும், இராமன் அரக்கர்களைக் கொல்ல வேண்டியுள்ளமையின், மேலும் தெற்கே செல்ல வேண்டுவதன் தேவையைக் கூறிப் புறப்பட்டான் [1]. இந்தப் படலத்தில் அகத்தியரின் பல சிறப்புக்களையும் குறிப்பிடுகிற கம்பர், நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்'[2] எனவும் குறிக்கின்றனர். அவர் காலத்திலேயே அங்குள்ள அகத்தியர் தமிழ் அகத்தியர் என்ற எண்ணம் உண்டாகியிருக்க வேண்டும். என்றாலும், அவரே அடுத்துச் சுந்தரகாண்டத்தில் பொதியமலையையும் அகத்தியரையும் காட்டுகின்றார்.


  1. கம்பராமாயணம், அகத்தியப்படலம், 53
  2. ஷை (மேலது). 54