106
வரலாற்றுக்கு முன்
கருதியமையே இத்தகைய கற்பனைக் கதைகளுக்கும் பிறவற்றிற்கும் இடம் கொடுத்ததெனவும். உண்மையை எண்ணின், இருவேறு பகுதிகளில்—வடக்கிலும் தெற்கிலும்—இருவேறு அகத்தியர் வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம் எனவும், அவர்தம் பெயர் ஒற்றுமையைத் தவிர வேறு எதிலும் அவர்க்குள் தொடர்போ வேறு ஒற்றுமையோ இருந்ததில்லை எனவும் கொள்ளுதல் பொருத்தமாகும் என எண்ணுகின்றேன். எனினும், இக்கருத்து அறிஞர்தம் ஆராய்ச்சிக்கு உரியதேயாகும்.
தமிழ் இலக்கியங்களில் வரும் அகத்தியரைப் பற்றி இனி எண்ணிப் பார்க்கலாம்: பல இலக்கியங்கள் அகத்தியர் பொதிய மலையில் தங்கியவர் என்றும். அவர் இன்னும் அங்கேயே இருக்கிறார் என்றும் கூறுகின்றன. அக்கூற்றுக்கள் எவ்வளவு உண்மை என்பதை நான் இங்கே காட்டத் தேவை இல்லை. பொதியமலை தமிழ்நாட்டுத் தென்கோடிக்கருகில் இனிய தென்றலை வாரி வீசிக் கொண்டிருக்கின்றது. அத்ன் இனிமை மெள்ளத் தவழ்ந்து வடக்கே சென்றது. மதுரைக்கு அண்மையில் அத் தென்றல் வீசிய சிறப்பைப் பொதியத் தென்றல் போந்தது காணிர்’ என இளங்கோவடிகள் உணர்ந்து போற்றுகிறார். தென்றல் இனிமை தருவது; தமிழும் இனிமை தருவது இரண்டையும் பிணைத்துத் தென்றலும் தமிழும் பொதியத்திலிருந்து புறப்பட்டன எனக் கூறினார்களோ எனக் கருத வேண்டியுள்ளது. அன்றியும், தமிழகத்துக்குத் தெற்கே இருந்த பரப்பாகிய குமரிக் கண்டத்தில் (Lemuria) தமிழ் மொழி தோன்றியதென்ற ஒரு கொள்கை இருப்பதாலும், அப்பகுதி அழிய, மெள்ள மெள்ள வடக்கே வளர்ந்து அம்மொழி வளம் பெற்றதாய் இருப்ப தாலும், தெற்கே இன்று உயர்ந்துள்ள குன்றிலிருந்து அது தோன்றி வளர்ந்தது என்று கொண்டார்களோ என நினைக்க வேண்டியுள்ளது. பொதிய மலையில் அகத்தியர் வாழ்ந்தார் எனக் கொண்டு அவர் தமிழை வளர்த்தார் எனக் கொள்வது தவறு அன்று என்றாலும், அவரைப்பற்றித்