தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
113
சங்க காலம்’ எனக் கூறும். இறையனார் களவியல் உரை தொல்காப்பியம் இடைச்சங்க காலத்தில் எழுந்த நூல் என்றும். அவ்விடைச் சங்கம் கபாடபுரத்தில் இருந்த தென்றும் குறிக்கின்றது. எனவே இடைச்சங்க காலத்துக்கும் கடைச்சங்க காலத்துக்கும் இடையில் ஒர் ஊழி தோன்றியிருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் வரும்,
‘அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கை இமயமும் கொண்டு
தென்திசை ஆண்ட தென்னவன் வாழி'
என்னும் அடிகளின் வழி ஒர் ஊழி உண்டாயதென்றும் அதற்கு முன்னரே தொல்காப்பியர் தம் நூலை இடைச்சங்கத்தில் இயற்றினர் என்றும் கூறுவர். ஊழிக்கு முன் இருந்த நிலையைப்பற்றியும் அக்கால நாட்டு நிலை பற்றியும் தொல்காப்பிய எழுத்ததிகார முன்னுரையில் (கழகப் பதிப்பு) திரு. கா. சுப்பிரமணியப்பிள்ளை அவர்கள் விளக்கியுள்ளார்கள். இக் காலத்துக் குமரி முனைக்குத் தெற்கே பரந்த நிலப்பரப்பு இருந்ததென்பதை இன்றும் நூல் ஆராய்ச்சியாளர் சிலரும், தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சிலரும் கண்டுள்ளனர். இழந்த ‘இலெமூரியாக் கண்டம்'[1] என்று ஆங்கிலத்தில் ஆழ்கடலின் கீழ்ச்சென்ற அந்த நாட்டைப் பற்றி ஒரு நூல் எழுதப்பட்டுள்ளது. மற்றும் தமிழ்நாட்டுப் பழங்கால இலக்கியங்களிலும் இவை பற்றிய குறிப்புக்கள் வருகின்றன. பஃறுளியாற்று மணலினும் பல நாள் வாழ வேண்டுமென மன்னரை வாழ்த்திய அடிகள், புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.[2] சிவதருமோத்திரம் என்ற சைவ நூல் பொதியிலுக்குத்