தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்
115
இருந்தது தொல்காப்பியம் என்பதும், அதன் கால எல்லை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதுமே இங்கு நாம் கொள்ள வேண்டுவன. அதன் தோற்றம் குமரிக்குத் தெற்கே அழிந்த நிலப்பரப்பில் இருந்திருக்கலாம் எனக் கொள்வதும் தவறு அன்று.
இனி இத்தொல்காப்பியத்தைப் பற்றி இந்த நூற்றாண்டில் அறிஞர் சிலர் ஆராய்ந்துள்ளனர். சிலர் ஆரியர் தமிழ்நாட்டுக்கு வருதற்கு முன்பே தொல்காப்பியம் தோன்றியது என்பர். சிலர், அதில் ஆரியர் பற்றியும் அவர்தம் வாழ்வு பற்றியும் குறிப்புக்கள் வருவதால், அது ஆரியர் வருகைக்கு நெடுங்காலம் பிந்தியே தோன்றியிருக்க வேண்டுமென்பர். முன்னவர் அத்தகைய சூத்திரங்களெல்லாம் இடைச் செருகல் எனத் தள்ளுவர். எனினும், சற்றுச் சிந்தித்து நோக்கின், இருவர் கொள்கைகளிலும் தவறு உள்ளமை காணலாம். ஆரியர் கொள்கைகள் எனப் பின்னர்க் கொள்ளும் அத்தனையும் அவர்களையும் அவர்களுடைய கொள்கைகளையும் பற்றியன அல்ல. அப்படியே ஆரியர் பற்றிய எல்லாச் சூத்திரங்களையும் இடைச்செருகல் எனத் தள்ளவும் உண்மையில் ஆராய்ச்சி இடம்தராது. நமக்குத் தேவையற்ற—நம் ஆராய்ச்சிக்கு மாறுபட்ட கருத்துக்களையெல்லாம் இடைச்செருகல் என்று தள்ளும் ஒரு முறை ஏற்பட்டுவிடுமாயின், எந்த இலக்கியத்தையும் எந்தக் காலத்துக்கும் கொண்டு வரலாம். இந்திய நாட்டின் வடக்கிலும் தெற்கிலும் பொதுவாக அக்காலத்தில் பரவி இருந்த கொள்கைகளையும் பிறவற்றையும் ஒரு சாராருக்கு உரியனவாக்கி, அவர்கள் வந்த பிறகே இவை இங்கு இடம் பெற்றன எனக் கொள்ளுவதும் பொருந்தாததாகும். எனவே, காய்தல் உவத்தல் அகற்றி, நடுவுநிலை நின்று நோக்கின், உண்மை ஓரளவு வெளிப்பட்டே தீரும்.
ஆரியர்கள் இந்தியாவில் கால் வைத்த காலம் கி. மு. 1500 என்பதை அனைவரும் ஒரு சேர ஏற்றுக்