உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1. வடக்கும் தெற்கும்



வரலாறு வரையறுத்த எல்லைக்கு அப்பாற்பட்டது. அதை எல்லை இட்டு அறுதியிடச் சில அறிஞர்கள் நினைக் கின்றார்கள். உலகத்தின் வரலாறு விஞ்ஞானம் வளர்வதன் முன் வெறுங் கதை வடிவத்தில் இருந்தது. இந்திய நாட்டிலே இந்த உலகம் பற்றி எழுதப்பட்ட கதைகள் எத்தனையோ! இன்றும் அவற்றுள் பல வாழ்கின்றன. ஆயினும், அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்த பின்னர் உலக வரலாறே புது உருப் பெற்றது. உயிர்த் தோற்ற வளர்ச்சியின் வரலாறும், மனித இனத்தின் தோற்ற வளர்ச்சி வரலாறும் இப்படியே புதுப்புது ஆராய்ச்சிகளின் வழி மாறிக்கொண்டே வருகின்றன. பல கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட இந் நில வரலாறும் உயிரின வரலாறும் மட்டுமல்லாது, பிற நாகரிக, பண்பாட்டு வரலாறுகளும் இந்த இருபதாம் நூற்றாண்டின் ஆராய்ச்சிகளின் வழியே புதுப்புது உண்மைகளை உலகுக்கு உணர்த்தித் தம்மை அறிமுகம் செய்துகொள்ளுகின்றன. மனித இனம் தோன்றி மெள்ள மெள்ள வளர்ந்த கடந்த கால நிகழ்ச்சிகளையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக வரையறுத்துக் காட்ட முடியவில்லை. ஏன்? மனிதன் வாழ்ந்த நெடுங்கால வாழ்வே நம் கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாததாகவே அமைந்துள்ளது. ஒருவேளை இன்றைய அறிவியல் நெறி அழிவுப்பாதையை விட்டு ஆக்கத்துறையில் கருத்திருத்தித் தொன்மைப் பொருள்களை ஆராயப் பெருமுயற்சி செய்யின் ஒரளவு பழங்கால உண்மைகள் பலவற்றை உணரலாம். ஆனால், இன்று நாம் காண்பது எல்லையற்றதாகக்

வ.—1