124
வரலாற்றுக்கு முன்
தொல்காப்பியர் ஆரியர் தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன் வாழ்ந்தவர் என்பது பொருந்துவதாகாது என்பதைக் காட்டினேன். ஆம். கி.மு. 1500-ல் வடவிந்தியாவில் நுழைந்த ஆரியர், அடுத்து ஐந்நூறு ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்திருப்பார் எனக் கொள்வது பொருத்தமேயாகும். எனவே, தொல்காப்பியர் காலத்தில் ஆரியர்கள் தமிழ்நாட்டில் இருந்தமையாலும், பொருளதிகாரத்தில் நாட்டு நிலையை உள்ளபடி காட்ட வேண்டிய முறை உண்மையாலும் அவர்தம் வாழ்க்கை முறைகள் இரண்டொன்றையும் இவர் எடுத்துக் காட்டினார் எனக் கொள்ளல் தவறாகாது. இரண்டொரு சூத்திரங்கள் அந்த வகையில் அமைகின்றன என்றாலும், இன்று இவர் காட்டுவது போன்று பலவற்றை வடநூல் மதம் பற்றி எழுதினார் எனக் கொள்வது பொருந்தாது. இரண்டோர் ஆரியச் சொற்கள் கலந்து வந்துள்ளன என்பதை அறிஞர் கா. சு. அவர்களே ஏற்றுக்கொள்கிறார்கள்[1] . எனினும், வடசொற்கள் தமிழில் பயிலுதற்கு இந்நூல் விதி வகுத்திருப்பதால், ஆரியரோடு தமிழருக்குத் தொடர்பு இவ்வாசிரியர் காலத்தே ஏற்பட்டிருக்கக் கூடுமென்பது யூகிக்கப்படும்[2]” என்று அவர்கள் கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. வடசொல் வேறு ஆரியச் சொல் வேறு என்பதை நான் முன்னரே ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளேன்[3]. வடசொல்' என்பது ஆரியமொழியைக் குறித்ததாகாது. தமிழில் வட சொல் எனவே குறிக்கப்பெறுவன வேங்கடத்துக்கு அப்பால் வழங்கப்பட்ட தெலுங்கு தொடங்கி, இன்றைய காஷ்மீரி வரையிலுங்கூடக் கொள்ளலாம். வடசொல் ஆரிய மொழியாகிய சம்ஸ்கிருதத்தைத்தான் குறிப்பதென்பதற்குச் சான்று இல்லை. பின் வந்த நன்னூலார் அவர் காலத்துக்கு ஏற்ப, வடமொழியை ஆரியம் என்னும் பெயரால் விளக்கியிருந்தார்.