பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொல்காப்பியத்துக்கு முன்னும் பின்னும்

127



இனி, தொல்காப்பியனார் திணை நிலத் தெய்வங்களை குறிப்பிடும்போது,

'மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே.'

                                  (அகத்திணை, 5)

எனக் காட்டுகின்றார். இதில் வரும் மாயோனைக் கண்ணனாகவும், சேயோனை முருகனாகவும், வேந்தனை இந்திரனாகவும், வருணனைக் கடற்றெய்வமாகவும் காட்டுவர் நச்சினார்க்கினியர். இக் கண்ணனும் முருகனும் தமிழ்நாட்டுக்கே உரிய கடவுளர் என்பது திரு.வி.க. அவர்கள் எழுதிய முருகன் அல்லது அழகு என்ற நூலாலும் பிற நூல்களாலும் நன்கு விளங்கும். மாயோன் திருமாலாகிப் பின் விஷ்ணுவானான். முருகன் பின் சுப்பிரமணியனானான். முருகனுடைய பிறப்பை பற்றிய பரிபாடலும், கந்தபுராணமும் இரு வேறு வகைப்பட்ட கருத்துக்களைக் காட்டுவதே இதற்குச் சான்றாகும். இனி, வேந்தனை இந்திரனாகக் காணும் நச்சினார்க்கினியர் எப்படி அப்பொருளைக் கொண்டார் என்பது தெரியவில்லை. பின் வந்த இலக்கணப் புலவர் சிலர் இந்த அடிப்படையிலேயே வேந்தன் என்பதற்குப் பதில் இந்திரன் எனவே குறித்துள்ளனர். எனினும், தொல்காப்பியர் காலத்தில் இந்திரன் வடநாட்டு வேத மரபின்படி அவர்தம் சிறந்த தலைவனாகவும் வழிபடு கடவுளாகவும் போற்றப்படுகின்றான். அவனை இங்கே ஒரு திணை நிலத் தலைவனாகத் தொல்காப்பியர் கொண்டிருக்க மாட்டார். எனவே, வேந்தன் என்பது இந்திரனைக் குறியாது எனக் கொள்ளலாம். வருணன் கடற்றெய்வம். கடற்கரையில் வாழும் மக்கள் அக் கடலையே நம்பி வாழ்ந்த காரணத்தால் வருணனைத் தெய்வமாகக் கொண்டார்களோ என்பது ஆராய்தற்