136
வரலாற்றுக்கு முன்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர் பாடியதாகும். இப் பாட்டைப் பாரத காலத்துப் பாடல் என்பர் ஆய்வாளர். இதில் வருகின்ற ஒருசில அடிகள் பாரதக் கதையைக் குறிக்கின்றன என்பது அவர் கொள்கைக்கு அரண் செய்கின்றது.
"அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
கிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈர்ஐம் பதின்மரும் பொருதுகளத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!"
- (புறம். 2: 13-16)
என்னும் அடிகளுக்கு உரைகண்ட ஆசிரியர், பாண்டவரும் நூற்றுவரும் செய்த குருசேத்திரப் போரில் சேரன் இரு படைக்கும் இறுதி வரையில் உணவளித்துக் காத்தான் என்று பொருள் கொள்ளுகின்றனர். இக்கருத்தே ஆராய்தற்குரியாக நாம் இங்கே கொண்டதாகும். பாரத காலத்தில் தமிழ்நாட்டு வேந்தன் அங்குச் சென்று உணவிட்டானா? என்பதே கேள்வி!
பாரதம் வரலாற்றுக்கு அத்துணை உதவி செய்யாது எனப் பலர் கூறினும். வரலாற்றறிஞர் சிலர் அதன் காலத்தை நன்கு துருவித்துருவி ஆராய்ந்திருக்கின்றனர். அவருள் ஒருவர் ஹேம் சந்திர ராய்சவுத்திரி[1] என்ற வரலாற்றுப் பேராசிரிராவர். அவர் தமது நூலில்[2] பாரதப் போர் நடைபெற்ற நாளைக் கணக்கிட்டிருக்கிறார். பரீட்சித்து மன்னனது ஆட்சிக் காலத்தை ஒட்டி அவர் ஆராய்ச்சி அமைகின்றது. கிறிஸ்து பிறப்பதற்கு முந்திய 14-ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் பரீட்சித்து இருந்தானென்பதும், அக்காலத்தை ஒட்டியே பாரதப்போர்