பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறளித்த சேரன்

137


நடைப்பெற்றிருக்க வேண்டுமென்பதும் அவர் தூல்வழி காணப் பெறுகின்றன.[1] எனவே, பாரதப் போர் சுமார் இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றிருக்கவேண்டும் எனக் கொள்ளல் பொருந்தும். அறிஞர் பலரும் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளுகின்றனர். நாமும் இதன்வழிக் காணின், பெருஞ்சோற்றுதியன் இன்றைக்கு மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டவனாய் இருத்தல் வேண்டும் எனக் கருதலாம். ஸ்மித்து அவர்கள் அப் பாரதப் போரில் தென்னாட்டவர்களும் கலந்திருக்க வேண்டும் என எண்ணுகிறார்.[2]

பாரத காலத்தில் தமிழ்நாட்டுக்கும் வட நாட்டுக்கும் தொடர்பு உண்டா என்னும் ஐயம் ஒரு சிலர் மனத்தில் எழலாம். மற்றும் அக்காலத்திலேயே இவ்வளவு தெளிவாக நல்ல பாடல்களைப் பாடும் தமிழ்க் கவிஞர்களும் அவர்களைப் பாராட்டும் மன்னர்களும் இருந்தார்களா என்னும் ஐயம் சிலருக்கு எழுதல் உண்டு. தொல்காப்பியர் காலத்தை இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பர் ஆய்வாளர். அவர் காலத்தில் அத்தகைய சிறந்த இலக்கண நூல் எழுதப்பெற வேண்டுமானால், அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நல்ல இலக்கியங்கள் நாட்டில் உருப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஒருதலை. அவர் கூறும் பல சூத்திரங்களில் 'என்ப', 'என்மனார் புலவர்' எனக் கூறுகின்றமையின், அவருக்கு முன்பே இலக்கியப் புலவர் மட்டுமன்றி, இலக்கணப் புலவரும் இருந்திருப்பர் என்பது தேற்றம். எனவே, 3,500 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சிறந்த இலக்கியம் தமிழில் எழுதப்பெற்றது என்று கொள்வதில் இழுக்கு ஒன்றும் இல்லை. இக் காலத்தையே இடைச்சங்க காலமெனக் கூறினர் எனக் கொள்ளலாம்.


  1. Political History of Ancient India 20.
  2. Oxford History of India, p. 6.