பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சோறளித்த சேரன்

145


நாகரிகம் திராவிட நாகரிகமே எனவும், பல தமிழ்நாட்டு அமைப்பு முறைகளை இங்கே காண இயலும் எனவும் அறிஞர் அறுதியிடுகின்றனர். 5000 ஆண்டுகளுக்கு முன் அங்கெல்லாம் பரவியிருந்த திராவிடர், பின்வந்த ஆரியருக்கு மெள்ள மெள்ள இடங்கொடுத்துத் தெற்கு நோக்கி வந்தனர் என்பதையும் வரலாறு காட்டுகின்றது. தம் பண்பாடும் பிறவும் கெடாதபடி மெள்ள மெள்ளத் தெற்கே வந்தார்களாயினும், அவர்தம் தொடர்பு வடநாட்டுடன் அடியோடு அற்றுவிடவில்லை என்பது துணிபு. எனவே, பாரதப் போர்க் காலத்தில் தமிழ்நாட்டார் அங்குச் செல்லவில்லை என்றோ, அவர்களுக்கு உதவவில்லை என்றோ கூறமுடியுமா? இப் பாண்டியர் பரம்பரை பற்றிய குறிப்புக்கள் வடநாட்டு வியாச பாரதத்திலும் பிறவற்றிலும் இருந்தன என்பதன்றி, நெடுந்தொலைவில் இருந்த சாவக நாட்டுக் குறிப்பிலும், வீர சோழனது காக்கிநாடாக் கல்வெட்டிலுங்கூட உள்ளன என்பதைக் கல்வெட்டு ஆராய்ச்சிகள் நன்கு காட்டுகின்றன அல்லவா? [1] எனவே, மிகு பழங்காலந்தொட்டுப் பிற தொடர்புகள் இல்லையெனினும், அரசியல் கலாசாரத் தொடர்பு கொண்டு தெற்கும் வடக்கும் வாழ்ந்தன என்றும், அதன் வழியில் பாரத காலத்தில் உதியன் பெருஞ்சோறு அளித்துப் போர்க்களத்தில் உதவினான் என்றும் கொள்ளல் தகும். இவன் காலத்தில் வட இமயம் அறிந்த ஒன்று என்பதும், அதைக் கொண்டே அரசரை நெடுங் காலம் வாழ்க என்று வாழ்த்தும் வழக்கம் உண்டென்பதும், பொதியில் தெற்கிலும் இமயம் வடக்கிலும் சிறந்திருந்தன என்பதும், இவற்றின் இடையில் தமிழர் தம் பண்பாடு கெடாத வகையில் மக்கட்பணி புரிந்துவந்தனர் என்பதும் இப்பாடல் ஒன்றாலேயே நன்கு விளங்கும்.


  1. (a) S.I.I. Vol. I, p. 59
    (b) Hulzack, Political History of Ancient India, p. 11.