பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





9. இராமனும் இராவணனும்



மிழ்நாட்டில் வழங்கும் வடநாட்டுப் பெருங்கதைகள் இரண்டு: ஒன்று இராமாயணம்; மற்றொன்று பாரதம். இரண்டுமே ஆரியர்கள் சிந்துசமவெளிக்கு வந்த பிறகு நடந்த கதைகள்—அல்லது–எழுதி வைத்த கதைகள் என்பர் ஆராய்ச்சியாளர். அவற்றை வடமொழியிலும் தமிழிலும் நல்ல காவியமாகவும் இலக்கியமாகவும் சிறந்த புலவர்கள் எழுதி வைத்துச் சென்றார்கள். தமிழில் கம்பர் தம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி இராமாயணம் என்னும் சிறந்த காப்பியத்தை எழுதியிராவிட்டால், நாட்டில் இத்துணை நாள் அந்த இலக்கியமும் அதில் வழங்கும் வரலாறும் உலவமாட்டா என்பது உண்மை. அதுபோன்றே வடமொழியில் வான்மீகியாரது வாக்கே அவ்வரலாற்றை வாழ வைக்கின்றது. பாரதமும் வடமொழியில் வியாசராலும் தமிழில் வில்லிபுத்துரராலும் வாழ்ந்துவருகின்றது. இரு பெரு வரலாற்றுக் காலத்தையும் பற்றி ஆராய்ச்சியாளர் பல்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஆரியர்கள் இந்தியாவுக்கு வந்த காலம் இன்றைக்கு 3,500 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலமாகும். இந்த இரு கதைகளும் அக்காலத்துக்குப் பின் எழுதப்பட்டனவேயாகும். இரண்டில் எது முந்தியது என்பது இன்னும் முடிவு செய்யப் பெறவில்லை. சிலர் இராமாயண காலம் முந்தியது என்பர்; சிலர் பாரத காலத்தை முன்னுக்குக் கொண்டு செல்வர். திரு பானர்ஜி அவர்கள் மகாபாரதமே காலத்தில் முந்தியது