150
வரலாற்றுக்கு முன்
யுள்ளார்.[1] இவை பற்றிய ஆராய்ச்சிகளெல்லாம் நமக்குத் தேவை இல்லை. என்றாலும், வரலாற்று ஆசிரியர் பலர் காட்டியுள்ளபடி தமிழ் நாடு இலக்கிய வளம் சிறந்து விளங்கிய கடைச்சங்க காலத்தை ஒட்டியும் அதற்கு முன்னும் வடக்கும் தெற்கும் எவ்வகையில் இணைந்திருந்தன என்பதைக் காட்ட இவை ஒரளவு துணை செய்கின்றன என்னலாம்.
தமிழ் இலக்கியங்களில் இராமாயணம் பாரதம் என்னும் இரண்டுமே வழக்கத்தில் உள்ளதைக் காண்கிறோம். கடைச் சங்ககாலத்தில் அக் கதைகளை யாரும் தமிழில் மொழி பெயர்க்கவில்லை என்றாலும், அவற்றின் குறிப்புக்கள் சங்க இலக்கியத்தில் இடம்பெறுவதைக் காணலாம்.
'வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல
ஒலிஅவிந் தன்றுஇவ் அழுங்கல் ஊரே.’
(அகம். 70 : 15.17)
என்று இராமன் கடற்கரையில் மந்திராலோசனை செய்யும் காலத்தில் அவன் பறவைகள் ஒலியை அடங்கினதைக் காட்டுகின்றது அகநானூறு.
'கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலம்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிங் தாஅங்கு’
(புறம். 378 : 18-21)
எனச் சீதையின் அணிகளைக் கிட்கிந்தையில் குரங்குகள் கண்ட சிறப்பினையும் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதையும் புறநானூறு குறிக்கின்றது.
- ↑ The oxioid History of India, by Vincent A. Smith p. 57. (A. A. Macdonell's History of Sanscrit Litrature)