இராமனும் இராவணனும்
153
காப்பதை விரதமாகக் கொண்டவர் என்பதை அவர் பாடல்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றன. என்றாலும், அவரை உலகுக்கு அறிமுகப்படுத்த விரும்பிய சங்கராசாரியார் அவர்கள், அவரைத் ‘திராவிடச் சிசு’ என்று வழங்குவதைக் காண்கிறோம். இவ்வாறு வடக்கு என்றதும் ஆரியர் என்ற எண்ணமும் தெற்கு என்றதும் திராவிடர் என்ற எண்ணமும் உண்டாகிவிடுகின்றன. இன்றும் நாட்டில் இந்தப் போராட்டம் நின்றபாடில்லை, ஸ்மித்து கூறுவது போன்று, ஓரளவு ஆரியர் தம் போராட்டத்தில் திராவிடரை வென்றுவிட்டதாகக் காணப்படினும், இன்னும் அவர்தம் போராட்டம் நீங்கவில்லை என்பதை நாட்டு நிகழ்ச்சிகள் நன்கு காட்டுகின்றன[1]. எனவே, இவற்றை எண்ணி, இராமனையும் இராவணனையும்கூட ஆரியனாகவும் திராவிடனாகவும் காண்கின்றனர். இந்த அடிப்படையிலே நாட்டில் பல போராட்டங்களும் கட்சி வேற்றுமைகளும் வளர்கின்றன. ஆயினும், உண்மையில் ஆராய்ந்து பார்ப்பின், இந்த வேறுபாட்டுக் கொள்கைக்குச் சிறிதும் இடம் இல்லை என்பது நன்கு விளங்கும்.
தமிழ் அறிஞர் ஒருவர் இராவணனை ஆரியரின் வேறு பட்டவன் என்றே எழுதியுள்ளார்[2]. இராவணனைப் பெருவீரன் என்பதற்கு யாரும் பின்வாங்கமாட்டார்கள். என்றாலும், அவனுடைய மரபு பற்றி ஆராயும்போதுதான் வேறுபட்ட கருத்து உண்டாகின்றது. இராமாயணத்தில் குரங்குகளாகவும், அரக்கர்களாகவும் காட்டப்பட்டவர்கள் தமிழர்களே என்றும், எனவே அது திராவிடரைப் பழித்துரைக்கும் ஒரு நூலென்றும், அதை ஒதுக்க நினைப்பவர் சிலர். எனினும், காய்தல் உவத்தல் இன்றி