154
வரலாற்றுக்கு முன்
இராமாயணத்தை ஆராய்ந்து நோக்கின், அதில் திராவிடர்கள்—சிறப்பாகத் தமிழர்களும் தமிழ்நாடும்.நன்கு போற்றப் படுகிறார்கள். கம்ப ராமாயணத்தில் சீதையைத் தேடவானரரை ஏவும் சுக்கிரீவன், அனுமன் முதலானோர்க்குத் தமிழ்நாட்டைப் பற்றி விளக்கும் பாடல்கள்[1] சிறந்தனவாகவே அமைகின்றன. வான்மீகியாரும் அப்படியே தமிழ் நாட்டைப் பாராட்டியுள்ளார் என வடநூல் அறிந்தவர் கூறியுள்ளனர். எனவே, இராமாயணத்தில் தமிழ்நாடும் அதைச் சுற்றியுள்ள திராவிட நாட்டுப் பிற பகுதிகளும் இழிவு படுத்தப்பெறவில்லை அந்தக் கதை வடக்கே ஆரிய பூமியில் பிறந்த இராமனுக்கும் எங்கோ தெற்கே ஒரு தீவில் வாழ்ந்த அசுரனாகிய ஆரிய இராவணனுக்கும் நடந்த ஒரு பெரும் போராகும். அந்த இராவணன் அறிவாலும் ஆற்றலாலும் பிறவற்றாலும் உயர்ந்தவன் என்பதைக் கம்பரும் வான்மீகியாரும் விளக்குவதாலேயே அறியலாம். எனினும், அவர்கள் அவனைத் திராவிடன் என்று எங்கும் குறிக்கவில்லை; அதற்கு மாறாக, அவனை ஆரியன் என்றே திட்ட வட்டமாகக் குறிக்கின்றார்கள்.
திரு. பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் தம் நூலில் இராவணன் பேராண்மை உடையவன் என்பதைக் குறிக்கின்றார். அவரும் அவனைத் திராவிடன் எனக் குறிக்கவில்லை. எனினும், சிலர் நாம் மேலே கண்டபடி, இராவணன் தெற்கில் இருந்தமையின் திராவிடன் எனக் கொள்ளுகின்றனர். தெற்கே இருப்பதால் அனைவரும் திராவிடராக மாட்டார். அதே போன்று வடக்கே இருப்பதால் அனைவரும் ஆரியராக மாட்டார். எனினும், இந்தக் கொள்கை எப்படியோ நாட்டில் நிலைத்துவிட்டது. ஆராய்ந்து பார்ப்பின், இராம இராவணர் போராட்டம் இரு வேறு வகைப்பட்ட ஆரிய மரபினருக்கு இடையில் நடைபெற்ற ஒரு போரே என்பது நன்கு விளங்கும்.
- ↑ கிட்கிந்தா காண்டம், நாடவிட்ட படலம், 26-31.