உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

வரலாற்றுக்கு முன்


யுள்ளார். இவற்றையெல்லாம் காணின், இராவணன் யாதொரு கலப்புமற்ற ஆரியப் பரம்பரையினன் என்பது நன்கு விளங்கும்.

என்றாலும், பிள்ளை அவர்கள் அந்தப் பரம்பரையினரை இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். ஒரு வகையாரை யட்சர்களென்றும் மற்றொரு வகையாரை இராட்சசர்களென்றும் காட்டுகின்றார். யட்சர்கள் தேவர்களாகிக் கடவுளர்களால் விரும்பப்பட்டுத் தேவருலகத்தில் வாழ்ந்தார்களென்றும், இராட்சசர்கள் தேவர்களுக்கு விரோதிகளாகி வேறு காடுகளிலும் தீவுகளிலும் வாழ்ந்தார்களென்றும் குறிக்கின்றார். அவர் கூற்றின்படியே ஆராய்ந்தால், பிரமன் மரபிலே—அல்லது ஆரிய மரபிலே—பிறந்த இருவேறு மரபினர் இவ்வாறு தமக்குள் வேறுபட்டுப் பிரிந்தனர் என்று கொள்வதே பொருத்தமானதாகும். மற்றும் அந்த வேறுபாடு அவர்தம் முன்னோர்தம் உரிமை மகளிரின் வழிப் பிறந்த மக்களுக்கும், மற்ற மகளிர் வழிப் பிறந்த மக்களுக்கும் இடையில் எழுந்த போட்டியோ என நினைக்க வேண்டியுள்ளது. பின்னாள் நந்தர் மரபில் வேற்று மகளுக்குப் பிறந்த சந்திரகுப்தனுக்கும் நந்தருக்கும் ஆட்சி பற்றி நடந்த ஒரு போரைப் போன்றதே இந்த இராமாயணப் போர் என்று கருத இடமிருக்கிறது.

திரு. பிள்ளை அவர்கள் இராக்கதர்கள் நல்ல நிலையில் வாழ்ந்தார்கள் எனக் காட்டுகின்றார். அது இராமாயணத்திலேயே நன்கு விளக்கப்பட்டுள்ளது. அனுமன் போன்ற பகைவர் வாக்கிலேயே இலங்கையின் ஏற்றத்தையும் சிறப்பையும் புகழ்ந்து கம்பர் இலங்கை எனும் காவல் மாநகரைப் பாராட்டுகின்றார். எனவே, அது பற்றியும் ஐயம் கொள்ளத் தேவை இல்லை. பிள்ளை அவர்கள் அதற்குக் காட்டும் காரணத்தைக் காண்போம். ‘ரக்க்ஷா’ என்ற வடமொழிச் சொல்லிற்குக் காப்பாற்றல் என்ற பொருள் உண்டன்றோ? அந்த அடிப்படையில் 'ரக்ஷிப்பவர்' இராக்கதர் என்கின்றார்.