இந்திய நாட்டு வடமேற்குக் கணவாய் வழியாகக் கடந்த நான்கு அல்லது ஐந்தாயிர வருடங்களாகப் பலப்பல இனத்தைச் சேர்ந்த மக்கள் மெள்ள மெள்ள உட்புகுந்து சிந்துநதிக் கரையிலும், அதன்பின் கங்கைச் சமவெளியிலும் குடியேறியிருக்கிறார்கள். மேற்கே கிரேக்க நாடு தொடங்கி, கிழக்கே மத்திய ஆசியா, சீன நாடு வரையிலிருந்து பல இனமக்கள் கூட்டமாகப் படையெடுத்தும், பண்பாட்டின் வழியும் வடவிந்திய எல்லை வந்து தங்கள் ஆதிக்கத்தையும் ஆணையையும் நிலைநாட்டியுள்ளார்கள். வரலாற்றுப் பேராசிரியராகிய ஸ்மித்து அவர்கள், ஆரியர் பல பாகங்களுக்குப் பிரிந்து போக, இந்திய எல்லையில் இவ்வாறு வந்தவர்களே இருக்குவேத ஆரியர்கள் என்று குறிக்கின்றார்கள்.[1] பார்நெட்டு என்பவர் செய்த ஆராய்ச்சியால் இரு முறை ஆரியர்கள் இந்தியாவில் புகுந்தார்கள் என்பதும், அவர்கள் கி மு. 2500 லும் 1500லும் வந்தவர்கள் என்பதும் புலப்படுகின்றன.[2] அக்காலத்திலெல்லாம் தெற்கே பாண்டியரும் சோழரும் சேரரும் ஆந்திரரும் ஆண்டனர் என்பதும், அவர்தம் மொழிகள் தமிழும் தெலுங்கும் என்பதும், தமிழ் எழுத்துக்கள் செமிட்டிக்கு (Semitic) இனத்தைச் சேர்ந்தவை என்பதும் புலப்படுகின்றன[3].