உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

வரலாற்றுக்கு முன்


வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர் ஹெகேதயஸ்[1] என்பவர் நன்கு விளக்கியுள்ளார். ஆறாம் நூற்றாண்டில் பாரசீகத்தில் ஆண்ட சைரஸ் (Cyrus), டேரியஸ் (Darius) போன்றார் காலத்திலேயும் அவர்தம் படைகள் இந்தியாவுக்கு வந்தன என்பது தெரிகிறது. இந்தத் தொடர்பு பின்னும் சில நூற்றாண்டுகள் தொடர்ந்திருந்தது. அப்படையெடுப்புக்களுள் ஒன்றுதான் கிரேக்க அலெக்ஸாந்தரின் படையெடுப்பு.

கிரேக்க நாட்டு மன்னனான அலெக்ஸாந்தர் பாரசீக மன்னரை வெற்றி கண்டு, மெள்ள மெள்ளக் கிழக்கு நோக்கி, கி.மு. 326ல் சிந்து நதிக் கரையில் வந்து சேர்ந்தான். அக் காலத்தில் கங்கைச் சமவெளியை நந்தர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் செல்வத்திலும் புகழிலும் சிறந்தவர்களாய் விளங்கினார்கள். அவர்கள் புகழ் தென்கோடி வரையில் பரவியிருந்தது. அவர்களுடைய புகழையும் செல்வத்தையும் அக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப் புலவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். எனவே, அவர்கள் புகழின் அளவை நாம் அறியக் கூடுமன்றோ?

அக்காலத்திலேதான் அலெக்ஸாந்தர் இந்திய மண்ணில் கால் வைத்தார். அவருடைய படை வீரர்கள் நாடு திரும்ப வேண்டும் என்று புரட்சி செய்யாதிருந்தால், ஒரு வேளை அவர்கள் கங்கைச் சமவெளிக்கு வந்திருக்கக் கூடும். அதுகாலை தமக்கு ஆட்சியே வேண்டும் என்று முயன்று கொண்டிருந்த சந்திரகுப்த மெளரியர் அலெக்ஸாந்தரின் துணையை நாடியிருக்க வேண்டும். சந்திரகுப்தரின் எண்ணம் நந்தப் பேரரசை வீழ்த்தவேண்டுமென்பதே. அதற்கு அவர் அலெக்ஸாந்தரின் துணையை நாடினார். பிறகு சாணக்கியரின் துணையும் கிடைத்தது. எனவே, அவர் பாடலிபுரத்தில் அரசாண்ட நந்தரை வென்று, தாமே அப்பரந்த நிலப் பரப்புக்குத் தலைவரானார்.


  1. Hekataius Qf Miletus, B, C, 549-486