நந்தரும் மெளரியரும்
167
வளப்பத்தையும் வாழ்வையும், பாண்டியர் போன்ற மன்னரையும், பிற சிறப்பியல்புகளையும் குறித்துச் சென்றார் என்பதை அவருடைய எழுத்துக்கள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன.[1] தாம்பிரபரணி பற்றியும் ஈழநாடு பற்றியும் அவர் குறித்துள்ளார்.
சந்திரகுப்தர் கடைசி நாளில் மைசூர் நாட்டில் வந்து தங்கி, சமண உண்மைகளைக் கேட்டறிந்து, அந்த நாட்டிலேயே கி.மு. 298 அல்லது 297ல் மறைந்தார் என்பர்.[2] சந்திரகுப்தர் பத்திரபாகு (Bhatrabahu) என்ற சமண ஆசிரியருடன் மைசூர் நாட்டுச் சிரவணபெலகோலாவில் வந்து தங்கினார் என்றும், வந்ததும் பத்திரபாகு மறைந்ததாகவும், சந்திரகுப்தர் பின்னர்ப் பன்னிரண்டு ஆண்டுகள் சமண நியதிப்படி உண்ணா நோன்பிருந்து உயிர்விட்டதாகவும், பின்பு அவரைப் பின்பற்றிய பல்லோர் தெற்கே புன்னாடு (Punnad - புனல்நாடு) நோக்கிச் சென்றதாகவும் கூறுவர். [3]
சந்திரகுப்தரையும், அவரது மெளரியப் பரம்பரையையும் நந்தர் பரம்பரையையும் அவர்தம் செல்வத்தையும் தலைநகரையும் குறிக்க வருகின்ற தமிழ்ப் பாடல்கள் சங்க இலக்கியத்தில் சில உள்ளன. கடைச் சங்ககால இலக்கியத் தொகுப்பு என்று அவை பொதுவாகக் கூறப்படினும், சில செய்யுள்கள் அக்கடைச் சங்கத்துக்கு (கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. முதல் நூற்றாண்டு வரை) முற்பட்டன என்பதை ஆராய்ச்சியாளர் நன்கு உணர்வர்.