உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நந்தரும் மெளரியரும்

173


நாட்டுக்கும் என்ன தொடர்பு? இவை பற்றி ஒரு சிறிது காணலாம் : கோசர்களைத் தமிழ் இலக்கியங்கள் 'நான் மொழிக்கோசர்' (மதுரைக்காஞ்சி), 'செம்மற்கோசர்' (அகம். 15), 'புனைதேர்க் கோசர்' (அகம், 251), 'இளம்பல் கோசர்' (புறம். 146), 'கருங்கட் கோசர்' (அகம். 90), 'பல்வேற் கோசர்' (அகம். 113), 'ஒன்றுமொழி கோசர்' (அகம். 196), 'வளங்கெழு கோசர்' (அகம். 205), ‘பல்லிளங் கோசர்' (அகம். 216), 'முதுகோசர்' (அகம். 262) எனக் குறிக்கின்றன. எனவே, அவர்கள் தமிழ் நாட்டுக்கு நெடுநாள் பழக்கமானவர்களானதோடு, சிறந்த வீரர்களாயும் உண்மை பேசுபவர்களாயும் இருந்தார்கள் எனக் கொள்ள வேண்டும். அவர்களை வரலாற்று ஆசிரியர் சத்திய புததிரர்கள் என்பர். ஒரு சிலர் இக்கொள்கைக்குத் தக்க சான்றுகள் இல்லை எனக்கூறி மறுப்பினும், பலர் அவர்களைச் சத்திய புத்திரர் எனவே கொள்ளுவர். அவர்கள்கள் வாழ்ந்த அல்லது ஆணை செலுத்திய இடம் பற்றிப் பல்வேறு கருத்துக்கள் இருப்பினும், திரு. 'தோமா’ (P. J. Thoma) அவர்கள் கூற்றே ஏற்றுக்கொள்ளக் கூடியதாய் உள்ளது. அவர் கூற்றுப்படி, அவர்கள் நாடு, வட மலையாளப் பகுதியும், தென்கன்னட காசக்கோடு பகுதியும் உள்ளடங்கிய நாடு என்று கொள்வதே பொருத்தமாகும். அப்பகுதி 'சத்திய பூமி' எனவும் வழங்கப் பெறுகிறதாம்[1]. இது சந்திரகுப்தர் மைசூர் வழியை மேற்கொண்டதற்கு ஒரு காரணமாகவும் அமையலாம். மற்றும் பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட செங்குட்டுவனுக்கும் பழையனுக்கும் போர் நடந்ததும் பதிற்றுப்பத்தால் அறிய இயல்கின்றது.[2]. இப்போர் நீண்ட காலம் நிலவியது போலும்!


  1. Journal of Royal Asiatic Society, 1923, p. 412.
  2. பதிற்றுப்பத்து (44.11-18; 49; 7-16)