வடக்கும் தெற்கும்
17
தங்கி வாழ்ந்த மற்றவர்களைப் பற்றியெல்லாம் எண்ணித் தங்கள் வாழ்க்கை பற்றியும், சுற்றுச் சூழல் பற்றியும், பிறவற்றைப் பற்றியும் எண்ணத் தொடங்கினார்கள். பிறகு அவர்கள் எண்ணத்தால் எழுந்த இலக்கியங்களும், வாழ்க்கை முறைகளும், பிறவும் அளப்பில. அவற்றுள் பெரும்பாலான இன்றளவும் வாழ்கின்றன என்பது பொருந்தும். அந்தக் காலத்தில் அவர்கள் எழுதிவைத்த இருக்கு வேதமோ பிறவோ இன்று நாம் காணும் சம்ஸ்கிருத அமைப்பில் இல்லை என்பதும் அன்றைய அவர்தம் மொழி இக்காலச் சம்ஸ்கிருதத்திற்குப் பல வகையிலும் வேறுபட்டது என்பதும் வரலாற்றறிஞர் காட்டும் உண்மையாகும்[1]. இன்றைய சம்ஸ்கிருதம் பெரும்பாலும் சுமார் கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலேதான் செம்மை செய்யப்பெற்றது என்பதும் மொழி ஆராய்ச்சி வழியும் பிற நிலையிலும் புலனாகும் ஒன்றாகும்[2]. இவற்றாலெல்லாம் ஏறக்குறைய இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் வடமேற்குக் கணவாய் வழியாக இந்தியாவில் குடியேறிய ஆரியர் பற்றியும் அவர்தம் அக்கால வாழ்க்கை பற்றியும் நன்கு அறிய முடிகின்றது. இந்த அளவிலேதான் அவர்கள் இருக்கு வேதத்தை ஒரு சிறு அளவு வரலாற்று எல்லைக்கு உரியதாகக் கொள்ளலாமேயன்றி அதை முழுக்க முழுக்க வரலாற்றுக்கு முழுநூலாகக் கொள்ள இயலாது[3]. இனி அவர்கள் வரும் காலத்தும் அவர்கள் வருகைக்கு முன்பும் இந்த இந்திய நாடு இருந்த நிலையையும் இதில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கை முறையையும் பற்றி சில சிந்தித்துப் பார்க்கலாமன்றோ!