உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

வரலாற்றுக்கு முன்


திராவிடர் செம்பைப் பயன்படுத்தினர் என்றும் காட்டுகின்றன என்பர்[1]. மற்றும் சிந்துவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட தாழிகளில் பல, சென்னைச் செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லவபுரம், பெரும்பெயர் ஆகிய ஊர்களில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தாழிகளை ஒத்துள்ளன எனவும் காட்டுவர். மற்றும் மத்திய தரைக்கடலில் பழங்காலத்தில் கிரீட்டில் (Crete) ஹெரடொட்டஸ் (Herodotus) காலத்தில் இத்தகைய தாழிகள் இருந்தனவாம். அப்புதைபொருள்கள் குமரி முனையையும் மத்திய தரைக் கடலையும் இணைக்கப் பயன்படுகின்றன என்பதையே எடுத்துக்காட்டுகின்றன அல்லவா?* [2]

பழங்காலத் திராவிட மக்கள் நல்ல பணப்புழக்கம் உடையவர்கள் என்றும், நிரம்ப நாணயங்கள் வைத்திருந்தார்கள் என்றும், பல அணைகள் கட்டி உழவுத் தொழில் செய்தார்கள் என்றும், அவ்வாறு கட்டி அழிந்த அணையின் சிதறல்கள் இன்றும் பலுசிஸ்தானத்தில் உள்ளன என்றும் காட்டுகின்றனர்[3]. மற்றும், ஆரியர் இந்தியாவுக்கு வந்த போது, வடவிந்தியா முழுவதிலும் திராவிடர்களே பரவி இருந்தார்கள் என்றும், ஆரியர் கங்கைச் சமவெளிக்கு வந்த போது, மகதம், தெற்குப் பீகார், இராஜபுதனம் ஆகிய பகுதிகளைத் திராவிடர்கள் ஆண்டார்கள் என்றும், அவர்களை ஆரியர்கள் அரக்கர் எனவே வழங்கினார்கள் எனவும் காட்டுவர்[4]. மற்றும் திராவிடர் இந்திய நாட்டில் மட்டுமன்றிக் கிழக்கே சுமத்திரா தொடங்கி மேற்கே மத்திய தரைக்கடல் வரை தம் பண்பாடும் நாகரிகமும் பரவ வாழ்ந்த ஒரு பெரும்பரம்பரையினர் எனவும் காட்டுகின்றனர்.[5]


  1. Pre Historic Anciient and Hundu lndla p. 13.
  2. * இக்கட்டுரையின் இறுதியில் காண்க
  3. Pre-Historic, Ancient and Hindu India, p. 13.
  4. ibid. p. 20
  5. Ibid. p. 29.