பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடக்கும் தெற்கும்

23



இதுவரையில் நாம் கண்ட அனைத்தும் இன்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முற்பட்டவற்றை விளக்கும் சான்றுகளாகும். இவை பற்றி நாம் மேலே கண்ட சில ஆசிரியர்களைத் தவிர்த்து, எண்ணற்ற அறிஞர் எழுதியுள்ளனர். மேலே கண்ட ஒவ்வொரு நூலிலும் அவர்கள் பலப்பல மேலை நாட்டு இந்திய நாட்டு வரலாற்று ஆசிரியர்களின் எழுத்துக்களைத் தத்தம் கூற்றுக்களுக்குச் சான்றுகளாக எடுத்துக் காட்டுகின்றார்கள். அவற்றையெல்லாம் ஈண்டு எடுத்துக் காட்டின், நூல் பெருகும் என்பதோடு, முடியாத ஒரு பெருஞ்சுமையுமாகிவிடும் என்று கூறி அமைகின்றேன். நூலுக்கு இடையில் கட்டுரைகளுக்குத் தேவையான வரலாற்று மேற்கோள்களை ஆங்காங்கே எடுத்துக் காட்டியுள்ளேன். இன்னும் நல்ல விளக்கம் வேண்டுவோர், அவர்தம் முழு நூல்களையும், அவற்றின் துணையாய் உள்ள பிற வரலாற்றறிஞர் நூல்களையும் படித்து ஆராய்ச்சி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

நான் இங்கே காட்ட விரும்பினவை ஒரு சிலவே. அவை, ஆரியர் இந்தியாவிற்கு வடமேற்குக் கணவாய் வழியாக இன்றைக்கு மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குமுன் வந்தார்கள் என்பதும், அவர்கள் வரும் காலத்தில் மிகச் சாதாரண மக்களாக, மொழி, பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுள் எங்கோ பின்னால் இருந்தார்கள் என்பதும், அவர்கள் வருங்காலத்தில் அவர்களுக்கு முன்னால் தெற்கிலிருந்தோ அன்றி மேற்கிலிருந்தோ வந்து இந்தியா முழுவதும் பரவி இருந்த பெருங்குடி மக்கள் திராவிட இனத்தவர் என்பதும், அவர்களை அப்பெயரால் வழங்க இயலவில்லை என்றாலும் பின்னால் அப்பெயரால் வழங்கப் பெற்ற அவர்தம் முன்னோர்கள் பரந்த பாரதம் முழுவதும் இருந்தார்கள் என்பதும், அவர்கள் சிறந்த நாகரிகமும் பண்பாடும் கொண்டவர்களாய், நகர் அமைத்து, அணை கட்டிப் பயிர்த்தொழில் செய்து பலவகையில் சிறந் திருந்தார்கள் என்பதும், புதியவராய் வந்த ஆரியர்