28
வரலாற்றுக்கு முன்
பாடல்கள் இவ்வுண்மைகளையே விளக்குகின்றன. ‘இந்திய வரலாற்று நூலும்’ இவ்வுண்மையை நன்கு குறிக்கின்றது[1]. மைசூர் நாட்டுக் கல்வெட்டு ஒன்று சந்திரகுப்தர் வடக்கு மைசூரை ஆண்டதாகக் குறிக்கின்றது[2]. இவ்வாறு ஸ்மித்து போன்ற வரலாற்று ஆசிரியர் பலர் ஆராய்ந்து கண்ட உண்மைகளைச் சிலர் தம் கருத்துக்கு ஏற்ப இல்லை எனக் கூற முன்வருவதை நினைக்க வருந்தாது என் செய்ய முடியும்?
இனி, ஏறக்குறைய இக்காலத்தில் வந்த பிற நாட்டார் குறிப்புக்களும் வடக்கையும் தெற்கையும் பிணைத்தே பேசுகின்றன. கி. மு. மூன்றாம் நான்காம் நூற்றாண்டுகளில் இந்தியா வந்த மெகஸ்தனிஸ், தாலமி போன்ற வரலாற்றறிஞரெல்லாரும் சந்திரகுப்த மெளரியர் காலத்தில் தமிழ் நாட்டில் மூவேந்தர் இருந்தனரென்றும் குறிக்கின்றனர். இவ்வாறு அக்கால எல்லையில் வடக்கும் தெற்கும் இணைந்து நின்றன. அதை அடுத்து ஒரு சில நூற்றாண்டுகளிலும் இந்த நிலையைக் காண்கின்றோம். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனது வடநாட்டு யாத்திரைக்கு உதவியவர் நூற்றுவர் கன்னர் என்பதும், அவரை வரலாற்றறிஞர் சதகர்ணி என முடிவு செய்தனர் என்பதும், அந்தச் சதகர்ணி என்ற பரம்பரையினர் ஆந்திர நாட்டு எல்லையில் ஆரியருடனும் நாகருடனும் தொடர்பு கொண்டு ஆண்டனர் என்பதும் வரலாறு கண்ட உண்மைகளாகும்[3]. ஏறக்குறைய அக்காலத்தை ஒட்டியே பின்னர் பஞ்சாபு வழியாக வந்த மற்றொரு மரபினராகிய பல்லவர் மெள்ள மெள்ளத் தெற்கு நோக்கி வர வழி தேடிக்கொண்டிருந்தனர்