வடக்கு, தெற்கு என்ற சொற்கள் எல்லையை ஒத்து நோக்கும் வகையில் பொருள் உணர்த்துவனவேயாம். இங்கே நாம் இச்சொற்களை வடவிந்தியா தென்னிந்தியா என்னும் பொருள்களிலேதான் வழங்குகின்றோம். இன்று பரந்த பாரதம் ஒன்றான போதிலும், இன்னும் பல வகையில் வடக்கும் தெற்கும் வேறுபட்டே இருக்கின்றன. இந்த எல்லை அடிப்படையிலே எத்தனையோ மாறுபாடுகளும் போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. மாறுபாடுகளுக்கு இடையில் ஒற்றுமை காண வேண்டும் எனச் சிலர் முயல்கின்றனர். இந்த நிலையில் இந்த இருநிலப் பகுதிகளும் வரலாற்றுக் காலத்திலிருந்து எவ்வெவ்வாறு இணைந்துள்ளன என்பதை வரலாற்று ஆசிரியர் பலர் காட்டுகின்றனர். ஆயினும், வரலாற்று எல்லைக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே இரண்டும் பலவகையில் இணைந்திருந்தன என்பதை நாட்டு இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், பிற நாட்டார் குறிப்புக்களும் நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
தமிழ்நாட்டு வரலாற்றின் எல்லை கடைச்சங்க காலத்தை ஒட்டியது என்பர். வடநாட்டு வரலாற்று எல்லை மௌரியர் ஆட்சி அல்லது அலெக்ஸாந்தர் படையெடுப்பு என்பர். எனவே, இக்கால எல்லையில் நின்று காணின், இதற்கு முன்பே வடக்கும் தெற்கும் பல வகைகளில் பின்னிப்