இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்
39
தமிழ் துய்த்துத் தம்மை மறந்து உள்ளத்தால் தமிழராய் வாழ்ந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். இப்பிரமதத்தன் அவருள் சிறந்தவனாகிப் பாட்டு இயற்றவும் ஆற்றல் பெற்றான். சென்ற சில நூற்றாண்டுகளில் மேலைநாட்டிலிருந்து வந்த வீரமாமுனிவர். போப்பு போன்றார் செயல் கண்டு போற்றும் நமக்கு இது வியப்பாமோ! இது நிற்க.
தமிழ்நாட்டுப் பண்பாட்டில் காணாத-தமிழர் அற வாழ்வுக்குப் புறம்பான சில பழக்கவழக்கங்கள் அக் காலத்திலேயே தமிழ் நாட்டில் இடம் பெற்றிருந்தன என்ற உண்மையினையும் பல சங்கப் பாடல்கள் நமக்கு உணர்த்துகின்றன. அவற்றுள் முக்கியமான ஒன்று, யாகம் செய்தல். அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று, என்று வள்ளுவர் காட்டிய நாட்டில் பல யாகங்கள் செய்த மன்னர்கள் வாழ்ந்தார்கள் எனக் காண்கின்றோம். ஆரியப் பழக்க வழக்கங்களுக்கும், மொழிக்கும், வழிபாட்டு முறைக்கும், பிறவற்றிற்கும் முதல் இடம் கொடுத்துப் போற்றிய பிற்காலச் சோழர்களே யாகத்தை விரும்பவில்லை; யாகத்தினும் தானமே மேல் என்ற எண்ண அடிப்படையிலேதான் பலப்பல அறங்களைப் பலப்பல வகைகளில் செய்தார்கள். ஆயினும், சங்க காலத்தில் இரண்டொரு மன்னர் யாகம் செய்வதையே சிறப்பாகக் கொண்டனர் என்பது தெரிகின்றது. யாகம் வளர்த்தல் நாட்டு மக்களாலும் மன்னராலும் விரும்பப்பட்ட ஒரு வழக்கமாகக் கொள்ளப்படவில்லை என்பது தெளிவு. மாறாக, அதை விரும்பாது வெறுத்தார்கள் என்பதும் துணிபு. எனினும், இராச சூயம்வேட்ட பெருநற்கிள்ளியாகிய சோழ மன்னனும், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியாகிய பாண்டியனும், பல்யானைச் செல்கெழு குட்டுவனாகிய சேர மன்னனும் தமக்காக அன்றேனும் பிறர் பொருட்டாகவேனும் யாகங்களைச் செய்தார்கள் என்பதைக் காண்கின்றோம். எனவே, கடைச்சங்க காலத்தில் நாட்டினர் அனைவரும்