பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

47


நன்கு விளக்குகிறார்[1]. இவ்வாறு அசோகர் கல்வெட்டுக்களாகிய எழுத்துக்கள் தென்னாட்டையும் அதன் பகுதிகளையும் நன்கு விளக்கிக் காட்டுகின்றன.

அசோகர் காலத்தில் தென்னாட்டு மக்களுக்கும் வடநாட்டு மக்களுக்கும் உணவு, உடை, வாழ்க்கை முறை முதலியவற்றுள் பலப்பல வேறுபாடுகள் இருந்தன எனக் காண்கின்றோம். அசோகர் காலத்தில் வடக்கிலும், மத்திய இந்தியாவிலும், தெற்கிலும் தனித்தனி வகைப்பட்ட மொழிக் குடும்பங்கள் வாழ்ந்திருந்தன என்பதும், வடவிந்திய மொழிகளுக்கும் தென்னிந்திய மொழிகளுக்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதும் நன்கு தெரிகின்றன[2]. அசோகரின் கலை நலம் மேலை நாட்டுக் கிரேக்க 'ஹெலன்'[3] கலை நலனை ஒத்ததென்பர் சிலர். எனினும், அம்மேலை நாட்டுக் கலை நலமும் அசிரியரிடமிருந்து[4] பெற்றதே என்றும், அந்த அசிரியர் மௌரியர்களுக்கு முன் இந்தியாவின் பல பாகங்களோடு தொடர்பு கொண்டும் இந்தியாவிலேயே வாழ்ந்தும் இருந்தார்கள் என்றும் காட்டுவர். அவர்களையே வேதம் அசுரர் எனக் குறிக்கின்றது என்பர். அவர்கள் ஆரியர் வருமுன் இந்தியா முழுதும் பெருநகரங்கள் அமைத்துச் சிறந்த நாகரிகம் பெற்று வாழ்ந்தவர்கள் என்பர் ஆய்வாளர்[5]. இந்தியநாட்டுக் கட்டடக் கலை பெரும்பாலும் அசுரரென்னும் அந்த அசிரியர்களாலேயே வளர்ச்சியுற்றதென்றும், அசோகர் காலத்தில் அது சிறந்து நின்றதென்றும், அசோகர் காலக் கலை நலமும் கலந்து அது அன்று தொட்டு இந்தியக் கலையாகவே அமைந்துவிட்ட


  1. Asoka, pp. 41, 42.
  2. ibid, pp. 198, 199.
  3. Hellenlc Art.
  4. Assyrians.
  5. Asoka, p. 215