உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டையும் இணைத்த எழுத்துக்கள்

49


நாகரிகம் ஓரளவு இந்தியா முழுவதும் பரவத் தொடங்கி விட்டது என்பது வரலாறு காட்டும் உண்மையாகும்.[1]

அசோகர் கல்வெட்டுக்களைக் காணும்போது அக்காலத்தில் வந்த யவன மக்களுடைய குறிப்புக்கள் இரண்டொன்றைக் கண்டோமல்லவா? ஆம்! அவை போன்றே அக்காலத்தில் இந்திய நாட்டுக்கு வந்த பலர் வடக்கையும் தெற்கையும் கண்டு பல கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவற்றுள் ஒரு சில கண்டு மேலே செல்லலாம்.

மெகஸ்தனிஸ் போன்ற மேலை நாட்டவரும் பாஹியான் போன்ற கீழை நாட்டவரும் அந்த வரையறுத்த வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இங்கே வந்து பல குறிப்புக்களை எழுதி வைத்துச் சென்றுள்ளனர். அவருட் சிலர் கடல் வழியாகவும், சிலர் தரை வழியாகவும் இந்தியாவுக்கு வந்துள்ளனர். கடல் வழி வந்துள்ள பலர் தென்னாட்டுக் கரைகளிலே இறங்கி, நாட்டில் உலவினர். தரை வழியாக வந்தவர்களோ, அகன்ற வடவிந்திய நிலப்பரப்பு வழியாக மெள்ள மெள்ளத் தென்னாட்டிலும் கால் வைத்தார்கள். மற்றும் மேலை நாட்டுக் கீழை நாட்டுக் கடல்வழி வாணிபத்திற்கு இடைநிலைக்களனாய்-நடு நாயகமாய்-இந்தியா, சிறப்பாகத் தென்னிந்தியா விளங்கிற்று. மற்றும் இந்தியா, சீன நாட்டுச் சமயமாகிய புத்த சமயத்தின் தாயகமாய் இருந்த காரணத்தாலே மிகு பழங்காலந்தொட்டே சமய நெறி போற்றிய சீனப் பேரறிஞர் பலர் இந்திய நாட்டுக்கு வந்து தென்கோடி வரையில் இதன் வளங்கண்டு எழுதி வைத்துள்ளனர். இவையெல்லாம் ஒரளவு வடக்கையும் தெற்கையும் பிணைத்தே பேசுகின்றன.

வரலாற்றுத் தந்தையாரென்று பேசப்பெறும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டவரான ஹெரடோட்டஸ்[2] என்பவர்


  1. Asoka, p. 243.
  2. Herodotus