உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

வரலாற்றுக்கு முன்


இந்தியாவைப் பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் முதன்முதல் விளக்கிக் காட்டுகின்றார். வெறுங்கற்பனைகளாக அன்றி, உள்ளன கூறும் வரலாற்று நிலைக்கு ஏற்ப அவர்தம் எழுத்துக்கள் அமைகின்றன. அவருக்கு முன் இந்தியாவைப் பற்றி எழுதியவர் உள்ளனரா என்பது அறியக் கூடவில்லை என நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் குறிக்கின்றார்கள்[1] . எனினும், மெகஸ்தனிஸ்[2] என்ற யவன ஆசிரியர் குறிப்பே நமக்குத் தென்னிந்தியாவைப் பிற நாட்டார் வழி முதல் முதல் காட்டுகின்றது. மேலே கண்ட அசோகர் காலத்தை ஒட்டி வந்த மெகஸ்தனிஸ் தெற்குக் கோடியில் வளம் நிறைந்த தாம்பிரபேன்’ (Tamprobane) என்ற பகுதி இருந்ததாகக் குறிக்கின்றார். அவர் செலுக்கஸ் என்ற யவன மன்னரால் கி.மு. 302ல் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டவர்[3]. அவர் பாண்டிய நாட்டைக் குறிக்கும்போது, அது மகளிரால் ஆளப் பெற்றதென்றும், முதல் மகள் ஹெர்குலிஸ் (Hercules) மகள் என்றும் குறிக்கின்றார். யவனர்தம் பழங்காலக் கதைகளில் வரும் கடவுளர் பற்றிய குறிப்புக்களோடு பாண்டிய நாடு அந்தக் காலத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இதை ஒட்டித்தான் போலும் பின் வந்தவர்கள் பாண்டிநாடு தடாதகைப் பிராட்டியாராலும், இறைவனாலும் ஆளப்பட்டது எனத் தமிழ் நாட்டு முறைக்கேற்பப் புராணங்களை எழுதிச் சென்றார்கள்! தென்னிந்தியாவைச் சிறப்பாகக் கூறிய இவ்வாசிரியர், இந்நாட்டு ஆமை, யானை முதலியவற்றையும், மணி, பொன் முதலிய விலை உயர்ந்த பொருள்களைப் பற்றியும் குறிக்கின்றார். எனவே, அந்தப் பழைய காலத்தில்கடைச்சங்க காலத்துக்கு முன்பே - தமிழகம் கிழக்கும் மேற்கும் நெடுந்தொலைவுக்கு அறிமுகமாகி இருந்ததோடு,


  1. Foreign Notices of South India, p.4.
  2. Megasthenes (B.C. 302)
  3. Historical Inscriptions of South India, p. 5.