உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

வரலாற்றுக்கு முன்



இவையன்றி, ஈழநாட்டு வரலாற்றைக் கூறும் ‘மகா வமிசம்’ என்ற வரலாற்றுக் குறிப்பின்வழி, கி.மு. 145ல் ஏலேரா என்ற தமிழ் நாட்டுச் சோழமன்னன் ஈழநாட்டு மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டு அரியணை ஏறினான் என்ற குறிப்பும் கிடைக்கின்றது[1]. கி. மு. 43க்கும் 29க்கும் இடையில் பாண்டியர் ஈழநாட்டை ஆண்டனர் என்ற குறிப்பும் உண்டு.

இவ்வாறு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே கிறிஸ்து பிறப்பதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தொடங்கியே-வடக்கும் தெற்கும் இணைந்து வாழ்ந்தன என்பது தெரிகின்றது. சங்க காலத்திற்குப் பிறகு இரு பகுதிகளும் இணைந்தமைக்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. மற்றும், அவை அனைத்தும் ஒரளவு வரலாற்று எல்லைக்குள் வந்து அமைந்துவிடுகின்றன. ஆகவே, இந்த அளவில் வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும் இணைந்தமைக்குள்ள சான்றுகள் சாலும் என அமைகின்றேன். இச்சான்றுகளுள் ஒவ்வொன்றையும் தனித் தளியாக விரித்துக் காணின், மிகப் பெருகும். வாய்ப்புள்ளவர்கள் ஆய்ந்து கண்டு, இத்துறையில் ஆராய்ச்சியை வளர்த்து, நாட்டுக்கு நலம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். அறிஞர் ஆவன செய்வாராக!


  1. Historical Inscriptions of South India, р. 13