உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





3. இமயமும் குமரியும்



இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வாழும் நமக்கு இமயமும் குமரியும் நன்கு விளங்குவனவேயாம். இந்திய நாட்டின் வடவெல்லையில் பனிச் சிகரங்களைக் கொண்டு வானோங்கி நிற்கும் இமய மலையையும், தென்கோடியில் உள்ள குமரி முனையையும் அறியாதவர் யார்? பலர் இமயத்தின் உச்கியில் நின்று அப்பனிச் சிகரங்களுக்கு இடையில் தம் மனத்தைப் பறிகொடுத்து இயற்கையில் தோய்ந்து நிற்பதும், மூன்று கடல்களும் தழுவிச் சிறக்கும் குமரிமுனையில் நின்று அதன் அமைதியில் தம்மைப் பறிகொடுப்பதும் நாள்தோறும் நாட்டில் நிகழ்கின்ற நிகழ்ச்சிகள்தாமே! இப்படி இரு பக்கமும் உயர்ந்த மலையும் ஆழ்கடலும் சூழ உள்ள இந்திய மண்ணில் வாழும் ஒவ்வொருவரும் உண்மையில் தம் நாட்டை எண்ணிப் பெருமைப்படத் தக்கவரேயாவர். எனினும், இந்த இரு எல்லைகளும் வரலாற்றுக் கால எல்லைக்கு முன் எவ்வாறு இருந்தன என்பதை எண்ணிப் பார்ப்பின் பல உண்மைகள் நமக்கு விளங்காமற் போகா.

இமயம் கடலுள் ஆழ்ந்த காலம் ஒன்று இருந்தது என்ற உண்மையை நிலவரலாற்றையும் தொன்மையையும் ஆய்கின்ற புலவர்கள் நன்றாக விளக்குகின்றார்கள். விந்தியமலைக்கு வடக்கே பெரிய கடற்பரப்பு ஒரு காலத்தில் இருந்ததென்றும், பின், உலக வரலாற்றில் மிகப் பிந்திய காலத்தில் இமயமும் பிற்பகுதிகளும் தோன்றின என்றும்