உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இமயமும் குமரியும்

59


மறைவதும் புதியன தோன்றுவதும் இயல்பே என்றும் தக்க காரணங்கள் காட்டி விளக்குகின்றனர்[1] . எனினும், இந்த இலக்கியங்களில் வந்த குமரித்தென்பாலைக் கடல்கொண்ட ஊழி என்று உண்டாயிற்று என்பது திட்டமாகக் கூற முடிய வில்லை. சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன் ஒர் ஊழி நடை பெற்றதென்றும், 5000 ஆண்டுகளுக்கு முன் மற்றோர் ஊழி நடைபெற்றதென்றும் கூறுவர். திட்டமாக இவற்றுள் ஒன்றாலேயே குமரிக்கண்டம் அழிவுற்றிருக்க வேண்டும் எனக் கொள்ளுதல் பொருந்தும்.

இனி, இந்த ஊழி பற்றி வடநாட்டுப் புராணங்களும் பிற ஆரியர் வரலாறுகளும் குறிக்கின்றன. வைவச்சுத மனுவின் காலம் கி. மு. 3100ஐ ஒட்டியதென்றும், அக்காலத்தில் ஒரு பெரிய நீர் ஊழி வந்ததென்றும், அதிலிருந்து ஒரு மீனின் உதவியால் அவன் உயிர் தப்பினான் என்றும், அந்த மீனுக்கு அவன் முன் செய்த உதவியே அவனை வாழவைத்தது என்றும், அவன் ஒர் உயரிய மலையின்மேல் ஏறிப் பிழைத்தான் என்றும் ஆரிய புராணங்கள் குறிக்கின்றன[2]. தமிழ் இலக்கியத்தில் வரும் மனுவேந்தனும் இவனும் ஒருவனோ என எண்ண வேண்டியுள்ளது. இருவரும் சூரியகுல முதல்வர் எனவே குறிக்கப் பெறுகின்றனர். இந்த மனு தன் ஒரே மைந்தனை அவன் பசுவின் கன்றைக் கொன்றான் என்ற காரணத்தால் அறநெறி வழுவா வகையில், தேர்க்காலில் இட்டுக் கொன்று நீதி வழுவா நெறி முறையின் ஆண்டவன். தன்னினும் தாழ்ந்த உயிருக்கும் இரங்கிப் பசுவின் துயரத்தைத் துடைத்த வரலாறும், மீனின் துயர் நீக்கிய வரலாறும் ஒரே வகையில் அமைகின்றன. இங்கு நமக்கு அத்தகைய ஆராய்ச்சி தேவை இல்லை. ஆனால், அந்த மனுவின் காலத்தில் சுமார் 5100 ஆண்டுகளுக்குமுன் ஒரு நீர் ஊழி உண்டாயிற்று என்ற


  1. கந்த மீட்சிப் படலம் பாடல் 16, 18.
  2. The Vedic Age, Vol. p. 271