உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்து வெளியும் தென்னாடும்

77


எழுதிய இந்திய வரலாற்றில் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டதெனவும், அது திராவிட, எகிப்து, மெசபட்டோமிய நாகரிகங்களின் சேர்க்கையாய் இருக்கலாம். எனவும் காட்டுகின்றனர். எனினும், சிலர் அதைத் திராவிட நாகரிகமே என எடுத்துக் காட்டுவதை விளக்கி அதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கின்றனர்.[1]

பல பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய திரு. R. D. பானர்ஜி என்பார். தம் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா’வில் சிந்துவெளி நாகரிகத்தைக் குறித்து, அது திராவிட நாகரிகமே என நிறுவியுள்ளனர்;[2] அக்கால நகரங்களாகிய மோகஞ்சோதாரோ, ஆரப்பா போன்ற நகரங்கள் திராவிடர்களாலோ திராவிடர் போன்றவர்களாலோ அமைக்கப்பட்டன என்கின்றார். அவர் அதற்கு ஆதாரமாக ஒருகாலத்தில் திராவிடர் இந்தியா முழுவதும் பரவி யிருந்தனர் என்பதை விளக்கி, இன்று பலுசிஸ்தானத்திலும், அசாமிலும், மத்திய இந்தியாவிலும் திராவிட மொழிக் குடும்பங்கள் வாழ்வதை எடுத்துக் காட்டியுள்ளார்; திராவிடர்கள் பலுசிஸ்தான்த்தில் கட்டிய அணைகள் பல இடங்களில் அங்கே சிதறிக்கிடக்கின்றன எனவும் காட்டுகின்றார்: பலுசிஸ்தானத்திலும் சிந்து சமவெளியிலும் திராவிடரின் பழங்கால மட்பாண்டங்கள், இன்று கண்டு பிடித்து எடுக்கப் பெற்றன என்பதையும் காட்டுகின்றார். இவ்வாறு பரந்த இந்திய நிலப்பரப்பிலும், பிற நாடுகளிலும் பரவியிருந்த திராவிட மக்களை வடநாட்டு வளமார்ந்த மண்ணிலிருந்து ஆரியருக்கு முன் வந்த வட்டமுகமுடைய ஒர் இனத்தார் தெற்கே துரத்திவிட்டனர் எனவும், பிறகு அவர்கள் ஆரியருக்கு அடங்கி வழி விட்டார்கள் எனவும்


  1. History of India, by Dr. N. K. Sinha and Dr. A. C. Banerji, pp. 29, 30.
  2. Prehistoric, Ancient and Hindu India, by R. D. Banerji, M. A., pp. 9, 34,