உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வரலாற்றுக்கு முன்


விளக்கும். தமிழ் நாட்டு ஊர்த் தெய்வங்களாகிய கொற்றவை, மாரி, பிடாரி என்பவற்றிற்கு இன்றும் ஆரியரோ, அன்றி அவரொடு சேர்ந்தவரோ பூசை செய்வதில்லை. அக்கோயில்களில் எல்லாவிடங்களிலும் ஆரியரல்லாத பழங்குடி மக்களாலேயே பூசை செய்யப்படுகின்றது. வெற்று வழிபாட்டுக்கும் கூட ஆரியர்கள் அக்கோயில்களுக்குச் செல்வதில்லை. அதற்கென உள்ள வழிபாட்டு முறையும் தமிழிலேதான் உள்ளது. எனவே, இந்தத் தமிழ் நாட்டுச் சத்தி வழிபாடுதான் சிந்துவெளி நாகரிக காலத்தில் அங்கே சிறந்திருக்க வேண்டும் என்று கொள்வதில் தவறு இல்லை.

இனி, சிவ வழிபாட்டைப் பற்றி நோக்குவோம் : மொகஞ்சதாரோ, ஆரப்பாவில் எத்தனையோ சிவலிங்கங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. அவை பல அளவில் அமைந்துள்ளன. வீடுகளில் வைத்து வழிபடும் சிறுசிறு இலிங்கங்களும் பொது இடங்களில் வழிபடப்பெறும் பெரிய இலிங்கங்களும் உள்ளன. செல்லுமிடமெல்லாம் கையில் உடன் கொண்டு சென்று பூசை சென்ய்யும் இலிங்கங்களும் உள்ளன. கல்லிலும் மண்ணிலும் இந்த இலிங்கங்கள் செய்யப்பட்ட கல்வழிபாடு இந்திய நாட்டில் ஆரியர் வருகைக்கு முன்னரே அமைந்த ஒன்று.[1] இந்திய நாட்டில் மட்டுமன்றி, பலுசிஸ்தானத்திலும் அசாமிலுங்கூட இத்தகைய வழிபாடு இருந்திருக்கின்றது. இத்தகைய இலிங்க வழிபாடு இன்றும் தமிழ் நாட்டில் ஊர்தோறும் இருக்கக் காண்கிறோம். சத்தியாகிய மாரியும் கொற்றவையும் ஊர்தோறும் உள்ளமை போன்றே, இலிங்கமும் ஊர் தோறும் கோயில் அமைத்துப் போற்றப்படுவதை அறியாதார் யாரே! அவற்றின் வழிபாட்டு முறைகளும் வைதிக முறையாகிய வேதவிதிப்படி அமையாது, பிற்காலத்து, கலந்த,


  1. Indus civilization, p. 58.