பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்து வெளியும் தென்னாடும்

87


தமிழருடையது. இரண்டையும் பிரிக்க முடியாது. 'சிவமின்றேல் சத்தி இல்லை; சத்தி இன்றேல் சிவமில்லை,' என்ற உண்மையே சைவ அடிப்படை. சத்தி தோற்ற அழிவு செய்பவள். இந்தச் சிவசத்தி நிலை தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் மட்டுமன்றி, மத்தியதரைக் கடற்பிரதேசங்களிலும் இருந்தது இந்தச் சத்தியைப் பற்றியும் இதனோடு இணைந்த சிவத்தைப் பற்றியுமே பிற்காலத்தில் பலப்பல பாடல்கள் உருவாயின.

மேலும், இந்தச் சிந்து வெளியின் வழிபாட்டு உருவம் தமிழ்நாட்டு ஐயனார் வழிபாட்டை நமக்கு நினைவுறுத்தும். தமிழ் நாட்டில் பல ஊர்களில் உயர்ந்த மரங்களின் கீழ் ஐயனார் சிந்துவெளிச் சிவனைப் போன்று நிமிர்ந்து தம் அடியின்கீழ் உயிர்களை அடக்கி வைத்திருப்பது போன்று உள்ளதை இன்றும் காணலாம். ஐயனார் என்றும், காத்தவராயன் என்றும், மன்னார்சாமி என்றும் பல பெயர்களால் ஐயனார் வழங்கப் பெறுகின்றார். மற்றும் இக்காலக் கோயிலிற்காணும் தட்சிணாமூர்த்தி என்பதும் இந்த அடிப்படையில் அமைந்ததேயாகும். அதன் பெயரே அது தென்னாட்டுக் கடவுள் என்பதை நமக்கு விளக்குகின்றதே! (தட்சிணம்-தெற்கு, மூர்த்தி-கடவுள்.) தென்னாட்டுக்கு உரிய கடவுளே அவர் என்பதைத்தான் அப் பெயரால் வழங்கினார்கள். பின்பு அது தென்முகக் கடவுளாய் நிற்கும் திசை நோக்கி அமையலாயிற்று. எனவே, தமிழ் நாட்டு ஐயனார் உருவைப் போன்றதே சிந்துவெளியில் உள்ள சிவன் உருவம் என்பது தேற்றம்.[1]

இந்த உருவங்களைத் தவிர்த்து, மர வழிபாடும், விலங்கு வழிபாடும், நாகர் வழிபாடும் சிந்து வெளி நாகரிகத்தில் நாம் காண்பனவாகும். மரத்தை அறிவு வளர்ச்சியின் அடையாளமாக வழிபட்டனர். கல்லாலமரத்தின்


  1. Indus Civilization, p. 56.