பக்கம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடமொழி-ஆரியம்-சமஸ்கிருதம்

95


சொல் எனப் பெயர்பெற்றது. அதுவே பின் சமஸ்கிருதமாகக் காட்டப்பெறுவது என விளங்கும் எனினும் ‘ஆரியச் சொல் போலும் சொல்’ என்ற இளம்பூரணர் உரையையும் பிராகிருதத்தைச் சேர்த்த தெய்வச்சிலையார் உரையையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

உரையாசிரியர்கள் காலம் பிற்காலச் சோழர்காலம். அக்காலத்தில் தமிழ்நாட்டில் சமஸ்கிருத மொழிக்கு ஏற்றம் உண்டாயிற்று என வரலாறு காட்டுகின்றது. எனவே அக்காலத்தில் வாழ்ந்த உரையாசிரியர்கள் அவர்தம் காலத்தை ஒட்டி அவ்வாறே உரை எழுதி மேற்கோள் காட்டிச் சென்றார்கள். எனினும், சிந்திப்பின் ஒர் உண்மை புலப்படும் என்பது உறுதி.

வடமொழி என்பது தமிழ்ச்சொல்; தமிழகத்துக்கு வடக்கே உள்ள ஒரு மொழியைக் குறிக்கும் எனலாம். தமிழ்நாட்டு வடஎல்லை சங்ககாலத்திற்கு முன்பிருந்தே வேங்கடமாக அமைந்துள்ளதை நாமறிவோம். சங்க இலக்கியங்களிலே,

பனிபடு சோலை
வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேயம்
(அகம். 211)

என்றும் ,

தமிழ் கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த
பன்மலை இறந்தே
(அகம். 31)

என்றும்,

குல்லைக்கண்ணி
வடுகர் முனையது
வல்வேற் கட்டி
நன்னாட்டு உம்பர்
மொழி பெயர்
தேஎத்த ராயினும்
(குறுந் 11)

என்றும் வேங்கடத்து அப்பால் வடுகர் நாடு தொடங்கிப் பல்மொழி பேசியவர் வாழ்ந்தனர் என அறிகிறோம்.